Posted in

செந்தில் பாலாஜிகிட்ட ஒரு பழக்கம் இருக்கு…அவர் தோள்ல கைபோட்டு கில்லுனா முடிஞ்சான்னு அர்த்தம்! பூகம்பத்தை கிளப்பிய பேட்டி…

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் ஆயுட்காலம் நிறைவடைய உள்ள நிலையில், கோவை மாநகராட்சியின் 22-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் அயலக அணியின் வடக்கு மாவட்ட அமைப்பாளருமான கோவை பாபு செல்வகுமார், தனது பதவியையும் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள தனது விரிவான ராஜினாமா கடிதத்தைத் தொடர்ந்து அவர் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில், கோவை மாவட்ட திமுகவை முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தன்னிச்சையாக இயக்குவதாகவும், அடிமட்டத் தொண்டர்களுக்கு எவ்வித மரியாதையும் இல்லை என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

விளா வாரியாகப் பேசிய பாபு செல்வகுமார், “கோவையில் செம்மொழிப் பூங்கா திட்டத்தில் மட்டும் சுமார் 40 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக வெளியில் பேசப்படுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால் கோவை மாநகராட்சியின் பல்வேறு துறைகளையும் சேர்த்து 400 கோடி ரூபாய்க்கும் மேல் அப்பட்டமான ஊழல்கள் நடந்துள்ளன. இங்கு வெறும் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிறிய சாலைப் பணிகளாக இருந்தாலும் சரி, அல்லது 50 கோடி மதிப்பிலான பெரிய கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் சரி, டெண்டர் ஒதுக்கப்படுவதற்கு முன்பாகவே பிக்ஸ் செய்யப்பட்ட குறிப்பிட்ட சதவீதத் தொகையைப் ‘பார்ட்டி ஃபண்ட்’ (Party Fund) என்ற பெயரில் லஞ்சமாகக் கொடுத்தால் மட்டுமே கோப்புகள் நகர்கின்றன” என்று அதிரடி உண்மைகளை உடைத்துள்ளார்.

செந்தில் பாலாஜியின் செயல்பாடுகள் குறித்து விவரித்த அவர், “கோவை மாவட்ட அரசியலில் செந்தில் பாலாஜியை எதிர்த்து யாரும் எதுவும் பேசிவிட முடியாது. அவரிடம் ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறது. கட்சிக்காரர்களின் தோள் மீது கைபோட்டு, ‘என்ன முதலாளி’ என்று அன்பாகக் கேட்பது போல ஒரு கில்லு கில்லுவார்; அப்படி அவர் ஒருவரைக் கில்லிவிட்டார் என்றால், அவனது அரசியல் வாழ்க்கை அன்றோடு முடிந்துவிட்டது என்று தான் அர்த்தம். இத்தகைய அச்சுறுத்தல் அரசியல் காரணமாகவே, கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக நிர்வாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரே கூட திராவிடக் கட்சிகள் மீதிருந்த அதிருப்தியால் திமுகவிற்கு வாக்களிக்காமல், மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்தனர்” என்று கட்சியின் உட்கட்சி ரகசியங்களைப் போட்டு உடைத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுகவில் தற்போது வாரிசு அரசியலே பிரதானமாக உள்ளதாகவும், தகுதி வாய்ந்த அடிமட்டத் தொண்டர்களுக்கு எவ்வித எதிர்காலமும் இல்லை என்றும் விமர்சித்துள்ளார். மேலும், “திராவிடக் கட்சிகளின் இந்தத் தொடர் லஞ்ச முறைகேடுகளால் நடுத்தர மக்களும், சாமானியர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவே, தேர்தலில் மக்கள் தவெக தலைவர் விஜய் மீது ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை வைத்து, புதிய எழுச்சியை நோக்கி நகர்ந்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார். கோவை திமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் இத்தகைய உட்கட்சி மோதல்களும், ஆளுமை மிக்கத் தலைவர்கள் மீதான பல நூறு கோடி ஊழல் புகார்களும் தமிழக அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது மிகப்பெரிய பூகம்பத்தைக் கிளப்பியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *