ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் 71 ஆண்டுகளாக வசித்து வந்த 87 வயதான மாரிகார்மென் அபஸ்கல் (Maricarmen Abascal) என்ற மூதாட்டி, வீட்டு வாடகையை 275% வரை வீட்டு உரிமையாளர் உயர்த்தியதால் வீட்டை விட்டு அராஜகமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாட்ரிட்டின் ரெட்டிரோ நகரில் உள்ள தனது குடியிருப்பில் 17 வயதில் குடியேறிய மாரிகார்மென், கடந்த 71 ஆண்டுகளாக அங்கே வசித்து வந்தார். ஆனால், அந்த வீட்டை வாங்கிய அப்ஜெஸ்டியன் (Urbagestion) என்ற தனியார் முதலீட்டு நிறுவனம், மாத வாடகையை 500 யூரோவிலிருந்து 2,650 யூரோவாகக் கடுமையான அளவிற்கு உயர்த்தியது. மாதம் 1,350 யூரோ ஓய்வூதியம் மட்டுமே பெறும் மூதாட்டியால் இந்த வாடகையைச் செலுத்த முடியாததால், நீதிமன்றம் மூலம் அவரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடைசி கட்டமாகப் பொருட்களை எடுக்க மூதாட்டிக்கு 30 நிமிடங்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், அவரைப் பலவந்தமாக வெளியேற்றக் காவல் துறையினர் முயன்றனர். இதைக் கண்டித்து மாட்ரிட் தெருக்களில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து “மாரிகார்மென், நீங்கள் தனி ஆள் இல்லை” என்று முழக்கமிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களைக் மீறி, மூதாட்டி ஸ்ட்ரெச்சரில் வைத்து ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லப்பட்ட காட்சிகள் தொலைக்காட்சிகளில் நேரலையாக வெளியாகி மக்களை உலுக்கின.
இந்த விவகாரம் ஸ்பெயினில் நிலவும் மிக மோசமான வீட்டுவசதி நெருக்கடியைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளதுடன், அந்நாட்டு அரசியலிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பிரதமர் பெட்ரோ சான்செஸ் இச்சம்பவத்தைக் கடுமையான சமூகத் துயரம் எனக் கண்டித்துள்ளதுடன், பலவந்தமாக மக்களை வெளியேற்றுவதைத் தடுக்கும் அவசரச் சட்டங்களைக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறார்.