மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, சுரேஷ் மற்றும் மீனாட்சி ஆகிய இருவரைக் காவல்துறையினர் சனிக்கிழமை (நவம்பர் 14) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 5 கிலோ தங்க நகைகளைத் தனிப்படைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி புதிதாகத் திறக்கப்பட்ட இந்த நகைக்கடையில், வியாழக்கிழமை அதிகாலை மின்தூக்கிக்காக (Lift) அமைக்கப்பட்டிருந்த துவாரம் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றார். இந்தச் சம்பவம் குறித்து எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுச் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகச் சந்தேகிக்கப்படும் நிஷாந்த் என்ற இளைஞரைக் காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவரது தந்தை சுரேஷ் மற்றும் திருப்பாலையைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான மீனாட்சி ஆகிய இருவரும் தற்போது பிடிபட்டுள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மதுரை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த சூழலில், தற்போது 5 கிலோ நகைகள் மீட்கப்பட்டிருப்பது விசாரணையில் முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் மீதமுள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை மீட்கும் பணியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளியான நிஷாந்த்தைப் பிடிப்பதற்கும், இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பதைக் கண்டறிவதற்கும் தனிப்படைப் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.