மெக்சிகோ நாட்டில் 328 அடி ஆழமுள்ள நீருக்கடி குகைக்குள் (Cenote / Sinkhole) சிக்கி, கடந்த 15 நாட்களாக மாயமாகியிருந்த 31 வயதான மீனவர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எராஸ்டோ கிரிசாண்டோ வால்டேஸ் என்ற அந்த மீனவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் காற்றும் நன்னீரும் இருந்த குகைப் பகுதியில் 15 நாட்கள் தங்கி உயிர் பிழைத்துள்ளார்.
கடந்த ஜூலை மாத இறுதியில் தனது தந்தையுடன் மீன்பிடிக்கச் சென்ற எராஸ்டோ, ஆழ்கடலில் மீன் ஒன்றை வேட்டையாட முயன்ற போது நீருக்கடி குகைப் பாதைக்குள் நீந்திச் சென்றுள்ளார். ஆனால், மீண்டும் திரும்பும் வழியைக் கண்டுபிடிக்க முடியாமல் திசைமாறி குகையின் உட்பகுதிக்குள் மாட்டிக் கொண்டார். அவர் பயன்படுத்திய ஆக்சிஜன் சிலிண்டர் தீர்ந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக குகைக்குள் காற்று நிரம்பிய பகுதி ஒன்றை அடைந்து அங்குத் தஞ்சம் புகுந்தார்.
அவரைக் கண்டுபிடிக்க மெக்சிகோ, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச தொழில்முறை குகை நீச்சல் வீரர்கள் (Cave Divers) தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர் கொண்டு சென்ற ஈட்டி மற்றும் சிலிண்டர் கடலுக்குள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, தேடுதல் பணி குகையின் ஆழமான பகுதிகளுக்கு விரிவாக்கப்பட்டது. தேடுதல் குழுவினர் உடலைக் கைப்பற்றும் நோக்கிலேயே சென்ற நிலையில், குகையின் இருண்ட பகுதியில் அவர் உயிருடன் இருப்பதை அறிந்து மெய்சிலிர்த்துப் போயினர்.
குகைக்குள் ஓடிய சிறிய நன்னீர் ஊற்றைக் குடித்தும், நம்பிக்கையை இழக்காமல் பிரார்த்தனை செய்தும் அவர் 15 நாட்களைக் கழித்துள்ளார். நாள்கள் சென்ற உணர்வே இல்லாமல், தான் வெறும் 3 நாள்கள் மட்டுமே அங்கு இருந்ததாக அவர் மீட்கப்பட்ட பின் தெரிவித்தார். தீவிர நீர்ச்சத்து குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் நலமடைந்து வருகிறார்.