Posted in

கோவை அமுதன் கொலைக்கு காரணம் ? சட்டப்பேரவையில் புயலைக் கிளப்பிய உதயநிதி ஸ்டாலின்!

கோவையில் 19 வயதான பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அது வெறுமனே மாணவர்களுக்கு இடையேயான கோஷ்டி மோதல் அல்ல என்றும், போதைப்பொருள் கும்பல் குறித்த தகவல்களைத் தெரிவித்ததால் பழிவாங்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது பேசிய அவர், இது தொடர்பாக மாணவரின் பெற்றோர் தன்னிடம் கூறிய அதிர்ச்சித் தகவல்களை வெளிப்படுத்தினார்.

அமுதனை இழந்து வாடும் அவரது பெற்றோரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகக் குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், “கல்லூரி வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து அமுதன் தகவல் அளித்த காரணத்தினால் தான், அந்த கும்பல் அவரைக் குறிவைத்துத் தாக்கிப் படுகொலை செய்துள்ளது என அவரது பெற்றோர்கள் என்னிடம் அழுது புலம்பினர்” என்று பேரவையில் தெரிவித்தார். மேலும், இதனை ஒரு சாதாரண மோதலாகக் கடந்து செல்ல முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாணவர் அமுதனின் பெற்றோர் எழுப்பும் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான மற்றும் ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர், போதைப்பொருள் விநியோகம் தொடர்பாகத் தகவல் தருபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். போதைப்பொருள் கலாசாரத்தைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பேரவையில் கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், முதற்கட்ட விசாரணையில் இது இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதத்தின் காரணமாக நடைபெற்ற மோதல் என்றே தெரியவந்துள்ளதாகக் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள அனைத்துக் கோணங்களிலும், குறிப்பாகப் போதைப்பொருள் தொடர்புகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.