தமிழகத்தில் வீடுகளுக்கான மின் நுகர்வைக் கணக்கெடுப்பதில் தொடர்ச்சியாக நிலவி வரும் குளறுபடிகளாலும் அநியாய மின் கட்டண உயர்வினாலும் பொதுமக்கள் கடுமையான நிதிப் சுமைக்கு ஆளாகி வேதனை அடைந்து வருகின்றனர். பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள இந்த மின் கட்டணப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு உடனடியாக ‘ஸ்மார்ட் மீட்டர்’ (Smart Meter) திட்டத்தைச் செயல்படுத்த முன்வர வேண்டும் எனப் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் விநியோக இழப்பைக் குறைத்து மக்களுக்குத் தடையற்ற சீரான மின்சாரத்தை உறுதி செய்யும் வகையில், மத்திய பாஜக அரசு ரூ.3,03,758 கோடி மதிப்பீட்டில் ‘ஆர்டிஎஸ்எஸ்’ (RDSS) திட்டத்தைச் செயல்படுத்தி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 3 கோடி நுகர்வோர் ஸ்மார்ட் மீட்டர்கள் உட்படப் பல்வேறு உட்கட்டமைப்புப் பணிகளுக்காகப் பிரதமரின் தலைமையிலான மத்திய அரசு ரூ.19,235.36 கோடியை அனுமதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு போதிய நிதியுதவி மற்றும் ஒப்புதல் வழங்கிய போதிலும், தமிழகத்தில் சென்னை தி.நகர் பகுதியில் மட்டுமே மிகக் குறைந்த எண்ணிக்கையில் சுமார் 1.28 லட்சம் மீட்டர்கள் பொருத்தப்பட்டுத் திட்டம் தாமதப்படுத்தப்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார். ஆட்களின் தேவையின்றி மின் நுகர்வைத் துல்லியமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் கணக்கிடும் இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைக் களத்தில் கொண்டுவருவதன் மூலமே, கணக்கீட்டு ஊழியர்களின் அலட்சியப் போக்கால் பொதுமக்கள் சந்திக்கும் கூடுதல் மின் கட்டணப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, அரசியல் காரணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ள ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைத் தாமதமின்றித் தமிழகம் முழுவதும் உடனடியாக முழு வீச்சில் செயல்படுத்த முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு இத்திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்தினால் மட்டுமே மின் கட்டணப் புகார்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்பது அரசியல் மற்றும் மின்சாரத் துறை வல்லுநர்களின் கருத்து ஆகும்.