Posted in

ஐரோப்பா மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்? அமெரிக்க தளங்களுக்குப் பாதுகாப்புத் தீவிரமாக்கம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போரை தீவிரப்படுத்தினால், ஐரோப்பிய நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியிட்டது. இந்த தகவலைத் தொடர்ந்து, தனது உறுப்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகள் மீது ஏவப்படும் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளத் தயார் என்றும், உறுப்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நேட்டோ (NATO) எப்போதும் கடமைப்பட்டுள்ளது என்றும் அதன் செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்காவின் ராணுவக் உள்கட்டமைப்புகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் தளங்கள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்த பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது ஐரோப்பிய கண்டத்திற்கும் நேரடியாக பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து ஐரோப்பாவில் உள்ள முக்கிய அமெரிக்க தளங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நேட்டோ அமைப்பின் தற்காப்பு மற்றும் தடுப்பு நிலைகள் மிகவும் வலுவாகவும் திறம்படவும் செயல்பட்டு வருவதாக நேட்டோ அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு சான்றாக, துருக்கியை நோக்கி ஏவப்பட்ட ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை நேட்டோவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக வழிமறித்து அழித்த சம்பவங்களை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

மத்திய கிழக்கு மோதல்கள் ஐரோப்பிய நாடுகளின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதில் நேட்டோ உறுதியாக உள்ளது. எந்தவொரு அவசர கால சூழலையும் சமாளிக்கும் வகையில் வான்வழித் தற்காப்பு அமைப்புகளும், கூட்டாளி நாடுகளின் படைப்பிரிவுகளும் உச்சகட்ட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நேட்டோ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.