Posted in

அணுஆயுதம் ஏந்திய இஸ்லாமிய குடியரசு பிரிட்டன்! – நெதன்யாகுவின் பேச்சால் வெடித்த சர்வதேச சர்ச்சை!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு Israel Army Radio ஊடகத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில், பிரிட்டனை “பிரிட்டன் இஸ்லாமிய குடியரசு” (Islamic Republic of Britain) என்று குறிப்பிட்டிருப்பது சர்வதேச அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், “அணுஆயுதம் ஏந்திய முதல் இஸ்லாமிய குடியரசாக பிரிட்டன் மாறும்” என்றும் அவர் கூறியிருப்பது பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் இடையிலான தூதரக உறவுகளில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அரை நூற்றாண்டுக்கு முன்பு முன்னாள் பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் மகன் ரான்டால்ஃப் சர்ச்சில் இஸ்ரேலுக்கு ஆதரவாக எழுதிய கட்டுரைகளை நினைவுகூர்ந்த நெதன்யாகு, “இன்றைய பிரிட்டனில் அத்தகைய ஆதரவை எதிர்பார்க்க முடியாது” எனக் கூறினார். பிரிட்டனின் முஸ்லிம் மக்கள்தொகையைக் சுட்டிக்காட்டி வலதுசாரி அமைப்புகள் பரப்பும் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வகையில் பேசப்பட்ட இந்த கருத்துக்கள், பிரிட்டன் நாட்டின் அரசியல் வட்டாரத்தில் கடும் கண்டனங்களைச் சந்தித்து வருகின்றன.

நெதன்யாகுவின் இந்த சர்ச்சை பேச்சைக் கடுமையாகக் கண்டித்துள்ள UK Foreign Office, “இத்தகைய கருத்துக்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” எனத் தெரிவித்து இஸ்ரேல் அரசிடம் தனது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. அதேவேளையில், காசா மோதல் மற்றும் பாலஸ்தீன ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இஸ்ரேலின் தீவிர நடவடிக்கைகளுக்கு எதிராகப் பிரிட்டன் அரசு கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்து வரும் சூழலில், இரு நாடுகளுக்கு இடையே நிலவும் வெளியுறவு பதற்றத்தை இந்தச் சர்ச்சை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

மறுபுறம், இஸ்ரேல் உள்நாட்டு அரசியலிலும் நெதன்யாகுவுக்குக் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இஸ்ரேல் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டு வரும் இக்கட்டான சூழலில், பாரம்பரிய நட்பு நாடான பிரிட்டனைப் பகிரங்கமாக விமர்சித்து நெதன்யாகு ராஜதந்திரத் தோல்வியை ஏற்படுத்தியுள்ளார் என அங்குள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் சாடி வருவதாக The Guardian ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.