அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், ஈரானுடன் ரகசியமாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அதில் ஈடுபட்டுள்ள உயர் அமெரிக்க அதிகாரிகளை இஸ்ரேல் உளவு அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வந்ததாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகளின்படி, டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், பென்டகன் கொள்கை தலைவர் எல்ப்ரிட்ஜ் கோல்பி உள்ளிட்ட முக்கிய பேச்சுவார்த்தையாளர்களின் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் நகர்வுகளை இஸ்ரேல் உளவு பார்த்துள்ளது. இந்த விவகாரம் வாஷிங்டன் அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இஸ்ரேல் மீதான உளவுத்துறை அச்சுறுத்தல் அளவை பென்டகன் ‘மிகவும் ஆபத்தானது’ (Critical) என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது.
இந்த உளவு விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் துணை அதிபர் ஜேடி வேன்ஸ் (JD Vance) இஸ்ரேல் குறித்து ஒரு கசப்பான உண்மையை பகிரங்கமாக உடைத்துள்ளார். ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல பொதுவான நலன்கள் இருந்தாலும், சில முக்கிய விவகாரங்களில் இரு நாடுகளின் இலக்குகளும் முற்றிலும் வேறுபடுகின்றன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானிடம் அணு ஆயுதம் சேருவதைத் தடுப்பது மட்டுமே அமெரிக்காவின் முதன்மை நோக்கம் என்றும், அதற்கு பேச்சுவார்த்தையே வழி என்றும் டிரம்ப் நிர்வாகம் கருதுகிறது. ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசோ ஈரானை முழுமையாக ராணுவ ரீதியாக ஒடுக்க நினைப்பதாக வேன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், இந்த ஒப்பந்தம் இஸ்ரேலுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், இது “அமெரிக்க மக்களுக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய வெற்றி (Home Run)” என்று ஜேடி வேன்ஸ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். டிரம்ப் மற்றும் நெதன்யாகு இடையே அண்மையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில், அமெரிக்காவின் பேச்சைக் கேட்காமல் ஈரானுடன் மோதலை நீட்டித்தால் இஸ்ரேல் சர்வதேச அரங்கில் தனித்துவிடப்படும் என்று டிரம்ப் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா கொண்டு வரும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்பதைத் தவிர நெதன்யாகுவுக்கு வேறு வழியில்லை என்றும், ஏனெனில் இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் அமெரிக்காவிடமே உள்ளது என்றும் டிரம்ப் தரப்பு அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
இருப்பினும், வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் இந்த உளவு குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளது. இஸ்ரேல் தனது எதிரி நாடுகளை மட்டுமே கண்காணிக்குமே தவிர, தங்களின் நட்பு நாடான அமெரிக்க அதிகாரிகளை ஒருபோதும் உளவு பார்க்காது என்று விளக்கம் அளித்துள்ளது. ஆனால், அமெரிக்க பாதுகாப்பு பணியாளர்களின் மொபைல் போன்களில் உரையாடல்களை இடைமறிக்கும் உளவு மென்பொருள்கள் கண்டறியப்பட்டதாக பாதுகாப்பு உளவுத்துறை முகமை (DIA) தெரிவித்துள்ளது. நீண்டகால நட்பு நாடுகளாகக் கருதப்படும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே, ஈரான் விவகாரத்தால் தற்போது ஏற்பட்டுள்ள இந்த மோதல் உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.