Posted in

நெதன்யாகு வருகைக்கு எதிர்ப்பு.. நியூயார்க்கில் வெடிக்கும் வெடிமருந்து கிடங்கு! – மேயருக்கு நியூயார்க் காவல்துறை எச்சரிக்கை!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவுள்ள நிலையில், நியூயார்க் நகர மேயர் சோஹ்ரன் மம்தானி (Zohran Mamdani) அவருக்கு எதிராக மேற்கொண்டு வரும் தீவிரப் பிரச்சாரங்கள் நகரில் ஒரு ‘வெடிமருந்து கிடங்கு’ (Powder Keg) போன்ற பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளதாக நியூயார்க் நகரக் காவல்துறை (NYPD) எச்சரித்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) பிடிவாரண்டைக் சுட்டிக்காட்டி நெதன்யாகுவை ஒரு ‘போர்க் குற்றவாளி’ என்று விமர்சித்த மேயர் மம்தானி, அவரை நியூயார்க்கிற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும், அவரது வருகைக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார். இருப்பினும், சர்வதேச அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்கும் ஒரு நாட்டின் தலைவரைக் கைது செய்ய உள்ளூர் நிர்வாகத்திற்குச் சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என நியூயார்க் சட்டத் துறை தெளிவுபடுத்தியதை அடுத்து, மம்தானி தனது கைது முடிவில் இருந்து பின்வாங்கிப் போராட்டங்களை ஊக்குவித்து வருகிறார்.

இந்த நிலையில், மேயரின் இத்தகைய தொடர் எதிர்ப்புக் குரல்களும், போராட்டங்களுக்கான அழைப்புகளும் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களைத் திரட்டக்கூடும் என்றும், இது ஐநா தலைமையகம் அமைந்துள்ள நியூயார்க் வீதிகளில் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கும் என்றும் காவல்துறை உயரதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, போராட்டங்களின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் நேரடி ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகக் காவல்துறை எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் ஐநா தூதர் டானி டானோன் மேயர் மம்தானியின் நடவடிக்கையைக் கடுமையாகச் சாடியுள்ளதுடன், இஸ்ரேல் பிரதமர் தனது பயணத்தை திட்டமிட்டபடி மேற்கொள்வார் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். அதேவேளையில், அமெரிக்கக் கூட்டாட்சி அரசின் பாதுகாப்பிற்கு மத்தியில், மேயரின் ஆதரவாளர்கள் மற்றும் இஸ்ரேல் ஆதரவு அமைப்புகளுக்கு இடையே வன்முறை வெடிக்காமல் தடுப்பதற்காக நியூயார்க் நகரம் முழுவதிலும் ஆயுதம் தாங்கிய ஆயிரக்கணக்கான போலிசார் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.