Posted in

உ.பி. தேர்தலில் ஓவைசி வைக்கும் கூட்டணித் தூண்டில்: சிதறப்போகிறதா முஸ்லிம் வாக்குகள்?

வரவிருக்கும் 2027 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பதைத் தடுப்பதற்காக, எதிர்க்கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி வைக்கத் தயார் என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். எந்தவொரு தனிப்பட்ட எதிர்க்கட்சியாலும் பாஜகவை ஒற்றையாக வீழ்த்த முடியாது என்றும், மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் ‘வாக்கு வங்கி அரசியல்’ என்ற பெயரில் முஸ்லிம் சமூகத்தினர் வெறும் வாக்காளர்களாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவதாகச் சாடிய ஓவைசி, தங்களின் சமூகத்திற்குப் பலமான அரசியல் தலைமையை உருவாக்கவே ஏஐஎம்ஐஎம் கட்சி அங்கு தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார். கூட்டணியை விரும்புவதாகத் தெரிவித்துள்ள அவர், அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் தங்கள் கட்சியின் இறுதி முடிவை அறிவிக்கவுள்ளதாகவும், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களை ‘பாஜகவின் பி-டீம்’ என விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஓவைசியின் இந்த அதிரடிக் கூட்டணி அழைப்பு உ.பி. எதிர்க்கட்சிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மூத்த எம்பி இம்ரான் மசூத் இதுகுறித்து எதிர்வினையாற்றுகையில், ஓவைசியின் கட்சி தனித்து களமிறங்கினால் அது பாஜகவின் வெற்றிக்கு மட்டுமே வழிவகுக்கும் என்றும், இஸ்லாமிய வாக்குகள் சிதறுவது இறுதியில் பாஜகவுக்கே சாதகமாக அமையும் என்றும் எச்சரித்துள்ளார். பீகார் தேர்தலில் தங்களுக்கு 6 தொகுதிகளை ஒதுக்க எதிர்க்கட்சிகள் மறுத்த பின்னணியையும் ஓவைசி சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம் வாக்குகள் கணிசமாக உள்ள மேற்கு உத்தரப் பிரதேச மாவட்டங்களான மொராதாபாத், சகாரன்பூர், ராம்பூர் மற்றும் பிஜ்னோர் ஆகிய பகுதிகளில் ஏஐஎம்ஐஎம் கட்சி தொடர்ந்து பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளது. 2027 சட்டமன்றத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் அமைக்கும் கூட்டணி அல்லது தனித்துப் போட்டி என்ற முடிவு, சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியின் முஸ்லிம் வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தைச் செலுத்தும் என்பதால் உ.பி. அரசியல் களம் இப்போதே சூடுபிடித்துள்ளது.