Posted in

எதுவுமே பண்ணல!: பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் திரள்!

சென்னை பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூர் வேதாந்தா முருகப்பா தெருப் பகுதியில் நீண்டகாலமாகத் தொடரும் கழிவுநீர் தேக்கம் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமையைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிரடி போராட்டத்தில் ஈடுபட்டனர். 60-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து இந்த முற்றுகைப் போராட்டத்தை நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கொடுங்கையூர் பகுதியில் தெருக்களிலேயே கழிவுநீர் வழிந்தோடுவதால், பொதுமக்கள் தினசரி கழிவுநீரை மிதித்துக் கொண்டே வீடுகளுக்குச் செல்ல வேண்டிய அவலநிலை நிலவி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் அதிகரிப்பதாகவும், கடந்த 15 ஆண்டுகளாக இந்த அடிப்படைப் பிரச்சனை தீர்க்கப்படாமல் முடங்கிக் கிடப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலின் போது இப்பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் வெற்றிக்குப் பிறகு எம்எல்ஏ அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மக்கள் வேதனை தெரிவித்தனர். நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறி அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் பதிலளிப்பதாகப் போராட்டக்காரர்கள் வேதனை தெரிவித்தனர்.

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த கட்சி நிர்வாகிகளும் காவல்துறையினரும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மக்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிக் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில், அப்பகுதி மக்களின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகள் உடனடியாகத் தொடங்கும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.