Posted in

என்னை ஏன் காப்பாத்த வரல? 60 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்ட 5 வயதுச் சிறுமியின் கேள்வி!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட அதிபயங்கர வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 60 மணி நேரத்திற்கும் மேலாக இடிபாடுகளுக்குள் உயிருடன் போராடிய 5 வயது சிறுமி ஒருவர் அற்புதமாக மீட்கப்பட்டுள்ளார். தலைநகர் காத்மண்டுவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பின் தனது பெற்றோரைச் சந்தித்த அந்தச் சிறுமி, “என்னை ஏன் இவ்வளவு நேரமாகப் காப்பாற்ற வரவில்லை?” என்று அழுகையுடன் கேட்ட கேள்வி உலகளவில் அனைவரின் நெஞ்சையும் உருக்கியுள்ளது.
நேபாளத்தின் ரசுவா (Rasuwa) பகுதியில் உள்ள எல்லைக் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மனீஷா உச்சாய் மகர் (Manisha Uchhai Magar) என்ற 5 வயதுச் சிறுமி வீட்டின் இடிபாடுகள் மற்றும் சேற்றுக்குள் புதையுண்டார். சிறுமி காணாமல் போனதால் அவரது பெற்றோர் நிலைதடுமாறித் தவித்த நிலையில், 60 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளுக்கு நடுவே எழுந்த மெல்லிய அழுகைச் சத்தத்தைக் கேட்டு மீட்புக் குழுவினர் அவரை அதிரடியாக மீட்டெடுத்தனர்.
உடலில் பல காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி உடனடியாக காத்மண்டுவில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பல நாட்கள் தேடுதலுக்குப் பிறகு மருத்துவமனையில் மகளைக் கண்ட பெற்றோர் அவரைக் கட்டியணைத்துக் கண்ணீர் விட்டனர். அப்போது, இருண்ட இடிபாடுகளுக்குள் மூன்று நாட்கள் தனியாகப் பயத்தில் நடுங்கிய சிறுமி, தனது பெற்றோரிடம் கேட்ட மழலைக் கேள்வி அங்கிருந்த மீட்புப் பணியாளர்களையும் மருத்துவர்களையும் நெகிழச் செய்தது.
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கால் 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, பல்லாயிரக்கணக்கானோர் உடைமைகளை இழந்து தவித்து வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், 60 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சிறுமி மனீஷா உயிருடன் மீட்கப்பட்ட நிகழ்வு மீட்புக் குழுவினருக்குப் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.