பிரித்தானிய ராஜ குடும்பத்தின் முன்னாள் இளவரசரான ஆண்ட்ரூ (மவுண்ட்பேட்டன்-வின்சர்), பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் கில்லைன் மேக்ஸ்வெல் ஆகியோருடன் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தங்கியிருந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புதிய தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, ஸ்காட்லாந்து காவல்துறை (Police Scotland) இந்த முதற்கட்ட விசாரணையை முறைப்படி தொடங்கியுள்ளது. 1999-ஆம் ஆண்டில் பால்மோரல் எஸ்டேட்டுக்கு எப்ஸ்டீன் மற்றும் மேக்ஸ்வெல் வருகை தந்த போது, அங்குப் பெண்கள் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டார்களா என்பது தொடர்பாகவும் காவல்துறை ஆராய்ந்து வருகிறது.
ஸ்காட்லாந்து காவல்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், புதிய தகவல்கள் பெறப்பட்டு விசாரணை ஆரம்பக் கட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணைகள் அனைத்தும் ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே நகர்த்தப்படும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதேவேளையில், நடைமுறையில் உள்ள விசாரணையின் கூடுதல் விவரங்களை வெளிப்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ரூ மீதான இந்த புதிய விசாரணை வழக்கு பிரித்தானிய அரச குடும்ப வட்டாரத்திலும் சர்வதேச அளவிலும் மீண்டும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், தான் எந்தவிதமான தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுப்பதாகவும் ஆண்ட்ரூ தொடர்ந்து கூறி வருகிறார். மனித கடத்தல் மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்கள் மீண்டும் மேலெழுந்துள்ளதால், அரச குடும்பத்தின் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.
தற்போது ஸ்காட்லாந்து அதிகாரிகள் கிடைக்கப்பெற்ற முதற்கட்ட தகவல்களைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
விசாரணையின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.