ரஷ்யாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து உக்ரைன் இராணுவம் நடத்திய அடுத்தடுத்த அதிநவீன ட்ரோன் தாக்குதல்களால், ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் தீப்பற்றி எரிந்துள்ளன. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முதல்முறையாக பொதுவெளியில் ஒப்புக்கொண்டுள்ளார். உக்ரைனின் இந்த நீண்ட தூரத் தாக்குதல்கள் ரஷ்யாவின் உள்நாட்டுப் பொருளாதாரத்தையும், போர் விநியோகச் சங்கிலியையும் கடுமையாகப் பாதித்துள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் ரஷ்யாவின் தெற்குப் பகுதியான கிராஸ்னோடர் (Krasnodar) மற்றும் யாரோஸ்லாவ் (Yaroslavl) ஆகிய மாகாணங்களில் உள்ள பிரமாண்டமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை உக்ரைனிய ட்ரோன்கள் துல்லியமாகத் தாக்கின. குறிப்பாக ஸ்லாவியன்ஸ்க் (Slavyansk) பகுதியில் உள்ள ஆலை முற்றிலும் தீக்கிரையானது. இந்தத் தாக்குதல்களின் விளைவாக ரஷ்யாவின் ஒட்டுமொத்த எண்ணெய் சுத்திகரிப்புத் திறன் கணிசமாகக் குறைந்துள்ளதோடு, நாட்டின் 50-க்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்திற்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய கட்டாயமும் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய அரசுத் தொலைக்காட்சியில் பேசிய அதிபர் புடின், உக்ரைனின் இத்தகைய தாக்குதல்கள் தங்களுக்கு “தெளிவான சிக்கல்களை” ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். நாட்டில் தற்காலிகமாக ஒரு குறிப்பிட்ட அளவு எரிபொருள் பற்றாக்குறை நிலவுவதை ஏற்றுக்கொண்ட அவர், எனினும் இந்த நெருக்கடி இன்னும் ஆபத்தான நிலையை எட்டவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தட்டுப்பாட்டைச் சமாளிக்க எரிபொருள் இறக்குமதியை அதிகரிக்கவும், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய பெட்ரோல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்குத் தற்காலிகத் தடை விதிக்கவும் மாஸ்கோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சுமார் நான்கு ஆண்டுகளைக் கடந்து நீடித்து வரும் இந்த உக்ரைன்-ரஷ்யா போரில், ரஷ்யாவின் எல்லைகளையும் தாண்டி மாஸ்கோ வரை உக்ரைன் தனது தாக்குதல் எல்லையை விரிவுபடுத்தியுள்ளது. ரஷ்யாவின் வருவாயை முடக்கும் நோக்கில் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி எடுத்துள்ள இந்த “நீண்ட தூரத் தடவடிக்கை” (Long-range sanctions), ரஷ்ய மக்களைப் போரின் நேரடிப் பாதிப்பை உணரச் செய்துள்ளது. அதே நேரத்தில், நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்தப் போவதாகவும், இத்தகைய தாக்குதல்கள் போர்க்களத்தில் ரஷ்யப் படைகளின் முன்னேற்றத்தைப் பாதிக்காது என்றும் புடின் உறுதியளித்துள்ளார்.