Posted in

செயற்கைக்கோள் படங்கள் கிளப்பிய சந்தேகம்… புடின் அடுத்த அணு நகர்வு?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ‘பறக்கும் செர்னோபில்’ (Flying Chernobyl) என்று அழைக்கப்படும் ‘பியூரவெஸ்ட்னிக்’ (Burevestnik / SSC-X-9 Skyfall) என்ற அதிநவீன அணுசக்தி ஏவுகணையை சோதிக்கத் திட்டமிட்டுள்ளதாகச் சர்வதேச உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. ஆர்க்டிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள ரஷ்யாவின் ‘நோவயா சேம்லியா’ (Novaya Zemlya) ஏவுதளத்தில் அதிநவீன இராணுவ விமானங்களும் அணுசக்தி பயன்பாட்டு வாகனங்களும் அதிகளவில் குவிக்கப்பட்டு வருவது இதற்கான முக்கிய அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

வரம்பற்ற தூரம் பாய்ந்து செல்லும் வல்லமை கொண்ட இந்த அணுசக்தி விசை ஏவுகணை (Nuclear-powered Cruise Missile), உலகெங்கிலும் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளையும் ரேடார்களையும் ஏமாற்றி இலக்குகளைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த ஏவுகணையின் சோதனையின் போது கதிர்வீச்சுப் கசிவு ஏற்படும் அபாயம் அதிகம் என்பதால், மேற்கத்திய வல்லுநர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இதனை மிகவும் ஆபத்தான ஒன்றாகக் கருதுகின்றன.

செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் உளவுத் தகவல்களின்படி, ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனைக் களத்தில் சமீபத்திய நாட்களில் அசாதாரண இராணுவப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. உக்குரைன் போரில் நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தனது அணுசக்திப் பலத்தை உலகுக்குக் காட்டுவதற்காகப் புடின் இந்த சோதனையை விரைவுபடுத்தி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே நடத்தப்பட்ட சில ஆரம்பக்கட்ட சோதனைகளில் இந்த ஏவுகணைத் திட்டத்தில் பின்னடைவுகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், தற்போது மீண்டும் அணுசக்தி இயந்திரத்தை இயக்கி சோதனை செய்ய ரஷ்யா தயாராகி வருகிறது. இந்த அணுசக்தி ஏவுகணை சோதனை நடைபெற்றால், அது ரஷ்யாவிற்கும் நேட்டோ அமைப்பிற்கும் இடையிலான ராணுவப் பதற்றத்தை மேலும் உச்சக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் எனக் கருதப்படுகிறது.