ஈரான் நாட்டின் தேசிய நாணயமான ‘ரியால்’ (Rial) அமெரிக்க டாலருக்கு எதிரான வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிலான வரலாற்றுச் சாதனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஈரானை சர்வதேச அளவில் நிதி ரீதியாகத் தனிமைப்படுத்தும் நோக்கில் அமெரிக்க அரசு புதிய தீவிரப் பொருளாதாரத் தடைகளை (‘Economic D-Day’) அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகக் செய்தி வெளியிட்டுள்ளன.
திறந்தவெளிச் சந்தையில் ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான ஈரானிய ரியாலின் மதிப்பு 2.02 மில்லியன் (20 லட்சத்திற்கும் மேல்) என்ற அளவிற்குச் சரிந்து படுபாதாளத்தைத் தொட்டுள்ளது. மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலவி வரும் போர்ப் பதற்றங்கள் மற்றும் கடற்படை முற்றுகை காரணமாக ஈரானில் உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. குறிப்பாக அரிசியின் விலை 60 சதவீதமும், இறைச்சியின் விலை 150 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளதால் அந்நாட்டு பொதுமக்கள் அன்றாட வாழ்க்கை நடத்தவே பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
நாணயத்தின் மதிப்பு மேலும் சரிவடையும் என்ற அச்சத்தில், அந்நாட்டு மக்கள் தங்களது சேமிப்புப் பணத்தை ஈரானிய ரியாலில் இருந்து தங்கம் மற்றும் பிற வெளிநாட்டு நாணயங்களாக மாற்ற வங்கியிலும் சந்தைகளிலும் திரண்டு வருகை தருகின்றனர். இருப்பினும், அமெரிக்க கருவூலத் துறை அண்மையில் விதித்துள்ள புதிய தடைகள் டிஜிட்டல் சொத்துக்கள், தங்கம், விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் துறை என அனைத்துப் பொருளாதார வழித்தடங்களையும் முடக்கியுள்ளதால் ஈரானின் பணவீக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவின் இந்தத் தீவிரப் பொருளாதார அழுத்தங்கள் மற்றும் இரண்டாம் நிலைத் தடைகள் (Secondary Sanctions) ஈரானுடன் வர்த்தகம் செய்யும் பிற நாடுகளையும் பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளன. இந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் ஈரான் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளதால், நிலைகுலைந்துள்ள ஈரானியப் பொருளாதாரம் இந்த இக்கட்டான நிதி நெருக்கடியிலிருந்து எவ்வாறு மீளப் போகிறது என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.