இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள பருத்தி காகிதத்தினாலான (Cotton Paper) ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட காலம் உழைக்கக்கூடிய பாலிமர் பிளாஸ்டிக் (Polymer Plastic) ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. சோதனை முயற்சியாக முதற்கட்டமாக ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்புடைய சிறிய தொகை நோட்டுகளைப் பிளாஸ்டிக் வடிவில் அச்சிடத் திட்டமிடப்பட்டு, இதற்கான சர்வதேச டெண்டர்களையும் ஆர்பிஐயின் கிளை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
காகித நோட்டுகள் அடிக்கடி கிழிந்து போவது, அழுக்கடைவது மற்றும் நீரினால் சேதமடைவது போன்ற காரணங்களால், ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து அகற்றிப் புதிதாக அச்சிட ஆர்பிஐ பெருந்தொகையைச் செலவிட்டு வருகிறது. ஆனால் பாலிமர் நோட்டுகள் காகித நோட்டுகளை விட 2 முதல் 6 மடங்கு வரை நீண்ட ஆயுள் கொண்டவை என்பதால், அச்சிடும் செலவு பெருமளவு குறைவதுடன் கள்ளநோட்டுகளை அச்சிடுவதையும் முற்றிலும் தடுக்க முடியும் எனப் பொருளியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இருப்பினும், பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் காகித நோட்டுகள் உடனடியாகச் செல்லாததாக அறிவிக்கப்பட மாட்டாது என அரசுத் தரப்பில் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30-க்குள் அனைத்துத் தாள் நோட்டுகளும் திரும்பப் பெறப்படும் எனக் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தி எனக் பிரஸ் இன்பர்மேஷன் பீரோ (PIB) மறுத்துள்ளதுடன், பிளாஸ்டிக் நோட்டுகள் களச் சோதனைக்குப் பிறகே படிப்படியாகப் பயன்பாட்டிற்கு வரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, சிங்கப்பூர் போன்ற 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்கனவே பாலிமர் நோட்டுகள் வெற்றிகரமாகப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்தியாவில் யுபிஐ (UPI) டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உச்சத்தைத் தொட்டிருந்தாலும், சாமானிய மக்களின் அன்றாட ரொக்கப் பயன்பாட்டிற்குப் பிளாஸ்டிக் நோட்டுகள் ஒரு புதிய பாதுகாப்பான அனுபவத்தையும், சில்லறைப் பணப் புழக்கத்தில் பெரும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.