உக்ரைனின் தொடர் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக நடைபெறும் ‘முக்கிய கடற்படை தின அணிவகுப்பை’ (Main Navy Day Parade) இந்த ஆண்டும் நடத்தப்போவதில்லை என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டைத் தொடர்ந்து, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த முக்கிய இராணுவக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது ரஷ்யாவின் பாதுகாப்பு பலவீனத்தை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஜூலை மாத இறுதியில் அதிபர் விளாடிமிர் புதின் முன்னிலையில் இந்த அணிவகுப்பு மிக விமரிசையாக நடத்தப்பட்டு வந்தது. ஆனால், நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான அணிவகுப்பு ஏற்பாடுகள் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை என்றும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அதிபர் அரசாணை எதுவும் ஜூன் 15 வரை பிறப்பிக்கப்படவில்லை என்றும் ரஷ்ய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் இந்த கொண்டாட்டம் தங்களுக்கு முக்கியமில்லை என ரஷ்ய கடற்படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் ரத்து நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக அண்மையில் குரோன்ஸ்டாட் (Kronstadt) கடற்படை தளத்தின் மீது உக்ரைன் நடத்திய தீவிர ட்ரோன் தாக்குதல்கள் பார்க்கப்படுகின்றன. ஜூன் மாத தொடக்கத்தில் உக்ரைன் நடத்திய வான்வழித் தாக்குதலில், ரஷ்யாவின் அதிநவீன ஏவுகணை தாங்கி கப்பலான ‘போய்கி’ (Boikiy) பலத்த சேதமடைந்தது. உக்ரைனின் அதிநவீன ட்ரோன்கள் ரஷ்ய எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருவதால், அதிபர் புதினின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கிரெம்ளின் வட்டாரங்கள் அஞ்சுகின்றன.
இதற்கு முன்னதாக கடந்த 2024 ஆம் ஆண்டிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த அணிவகுப்பின் சில பகுதிகள் சுருக்கப்பட்டன. ரஷ்யாவின் பிரம்மாண்ட போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை உலகிற்கு காட்டி தனது இராணுவ பலத்தை பறைசாற்றும் இந்த முக்கிய நிகழ்வை புதின் தொடர்ந்து முடக்கி வருவது, உக்ரைன் போர் மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களுக்கு பயந்து ரஷ்யா பின்வாங்குவதையே காட்டுகிறது என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.