Posted in

ஸ்பெயினில் வெடித்த எறும்பு போராட்டம்: வினோத உடையில் மக்கள் வீதியில் இறங்கி முழக்கம்!

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கட்டுப்பாடற்ற மற்றும் மிதமிஞ்சிய சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு (Mass Tourism) எதிராகப் பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டங்கள் தற்பொழுது ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளன. ஸ்பெயினின் புகழ்பெற்ற சுற்றுலாத் தீவுகளில் ஒன்றான மெனோர்காவின் (Menorca) தலைநகரான மஹோன் (Mahon) நகரின் மத்திய சதுக்கத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கருப்பு நிற உடைகளை அணிந்து தங்களை ‘எறும்புகள்’ போல உருவகப்படுத்திக் கொண்டு வீதிகளில் இறங்கி வினோதமான முறையில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

“சுற்றுலாப் பயணிகள் எங்களை எறும்புகளைப் போல நசுக்குகிறார்கள்” என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் இந்த வினோதப் போராட்டத்தை ‘ஜிஓபி மெனோர்கா’ (GOB Menorca) என்ற சுற்றுச்சூழல் மற்றும் குடிமக்கள் கூட்டமைப்பு முன்னெடுத்துள்ளது. அரசு அலுவலகங்களுக்கு முன்பாக மாபெரும் எறும்பு பொம்மைகளுடன் தரையில் அமர்ந்து கொண்ட போராட்டக்காரர்கள், “சுற்றுலா எங்களை நசுக்குவது போதும்”, “எங்கள் சொந்த வீடுகளை விட்டு எங்களை வெளியேற்றாதே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, டிரம்ஸ் உள்ளிட்ட இசைக் கருவிகளை முழங்கி “நாங்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்” என்று ஆவேசமாக முழக்கமிட்டனர்.

ஸ்பெயினுக்கு ஆண்டுதோறும் 80 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில், இதனால் அங்குள்ள வீடுகளின் வாடகை மற்றும் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். ‘ஏர்பிஎன்பி’ (Airbnb) போன்ற ஆன்லைன் தங்குமிடச் சேவைகளின் ஆதிக்கத்தால், தங்களின் சொந்த ஊரிலேயே சாதாரண நடுத்தர மக்களும், வேலை தேடி வரும் தொழிலாளர்களும் தங்குவதற்கு மலிவான வீடுகள் கிடைக்காமல் வீதிகளுக்குத் துரத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், சொகுசுக் கப்பல்களின் (Cruise Ships) வரவால் சுற்றுச்சூழல் மாசடைவதோடு, கடுமையான தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

இந்த ‘எறும்புப் போராட்டம்’ ஒரு ஆரம்பம் மட்டுமே என்றும், தங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் வரும் ஜூலை 26 அன்று அண்டை தீவான மல்லோர்காவின் (Mallorca) தலைநகரான பால்மாவில் ஒட்டுமொத்த சுற்றுலாத் தலங்களையுமே ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் “வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் போராட்டம்” நடத்தப்படும் என்றும் ‘குறைவான சுற்றுலா, நிறைவான வாழ்க்கை’ (Less Tourism, More Life) என்ற சமூக அமைப்பு எச்சரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளைத் தங்களுக்கு எதிராகப் பார்க்காமல், தங்களின் வாழ்வாதாரத்தையும் கலாச்சாரத்தையும் அழிக்கும் ஸ்பெயின் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவே தங்களது இந்த வாழ்வாதாரப் போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.