ஆப்பிரிக்காவில் நிலவும் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டத்தை முதலாக்கிக் கொண்டு, ரஷ்யாவின் உளவு அமைப்பான எஃப்.எஸ்.பி (FSB) மற்றும் மனிதக் கடத்தல் கும்பல்கள் இந்த மோசடி வலையை விரித்துள்ளன. துப்புரவுப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், பாதுகாவலர்கள் போன்ற சாதாரணப் பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதாகக் கூறி சமூக ஊடகங்கள் மற்றும் போலியான நிறுவனங்கள் மூலம் இளைஞர்கள் கவரப்படுகின்றனர். மேலும், அதிக சம்பளம் மற்றும் எளிதான முறையில் ரஷ்யக் குடியுரிமை வழங்கப்படும் என்ற ஆசையும் இவர்களுக்குக் காட்டப்படுகிறது. ஆனால் ரஷ்யா சென்றடைந்தவுடன், அவர்கள் முற்றிலும் ஏமாற்றப்படுகிறார்கள்.
அங்கு சென்றடையும் இளைஞர்களிடம், அவர்களுக்குப் புரியாத ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட இராணுவ ஒப்பந்தங்களில் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கப்படுகிறது. மொழி தெரியாததால் தாங்கள் எதில் கையெழுத்திடுகிறோம் என்று தெரியாமலேயே பல இளைஞர்கள் இதில் சிக்கிக் கொள்கின்றனர். கையெழுத்திட்ட சில வாரங்களிலேயே, மிகக் குறைந்த கால அடிப்படைப் பயிற்சி மட்டுமே அளிக்கப்பட்டு, அவர்கள் உக்ரைன் போரின் மிகக் கொடூரமான முன்களப் பகுதிக்கு (Frontline) பலவந்தமாக அனுப்பப்படுகின்றனர். மறுப்பவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகப் தப்பியவர்கள் கூறுகின்றனர்.
போர்க்களத்தில் இந்த ஆப்பிரிக்க இளைஞர்கள் மனிதக் கேடயமாகவும், பீரங்கி இரைக்காகவும் (Cannon Fodder) பயன்படுத்தப்படுகிறார்கள். முறையான ஆயுதங்களோ, போதிய உணவோ இன்றி உக்ரைனின் பலத்த பாதுகாப்பு வளையங்களைத் தாக்க ரஷ்யத் தளபதிகள் இவர்களைப் பயன்படுத்துகின்றனர். உக்ரைன் அரசின் “ஐ வாண்ட் டு லிவ்” (I Want to Live) திட்டத் தரவுகளின்படி, எகிப்து, கேமரூன், கானா, கென்யா போன்ற ஆப்பிரிக்காவின் 35 நாடுகளைச் சேர்ந்த 1,400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இவ்வாறு போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் நூற்றுக்கணக்கானோர் சில மாதங்களிலேயே பலியாகியுள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது ஆப்பிரிக்கா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமாற்றப்பட்ட தங்களின் குடிமக்களை மீட்க கென்யா, நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. போலி வேலைவாய்ப்பு முகவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளிலும் ஆப்பிரிக்கப் போலீஸார் இறங்கியுள்ளனர். உக்ரைன் போர் தங்களுக்குச் சம்பந்தமில்லாத தூரத்து விஷயம் என்று நினைத்திருந்த ஆப்பிரிக்க நாடுகளுக்கு, தற்போது தங்களின் சொந்த நாட்டு இளைஞர்களின் மரணம் பெரும் ராஜதந்திரப் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.