திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், அமமுக (AMMK) கட்சியில் இருந்து விலகி கடந்த 40 நாட்களுக்கு முன்பு தவெக-வில் இணைந்த திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவருக்கும், அவரது மனைவிக்கும் தவெக-வின் மற்றொரு பிரிவினர் நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியைக் காட்டி கொடூரக் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட தவெக நிர்வாகி பவானி மற்றும் அவரது கணவர் ஆகியோர் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை ஆதாரங்களுடன் விவரித்தனர். “ஆரம்பத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் காந்தி மார்க்கெட் பகுதி கலைச் செயலாளராகப் பணியாற்றியதாகவும். தவெக கொள்கைகளும், அதன் தலைவர் முதல்வர் விஜயின் செயல்பாடுகளும் பிடித்திருந்ததால் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெக-வில் இணைந்ததாக அவர் கூறினார். கட்சியில் இணைந்தது முதல் தீவிரமாகப் பணியாற்றி வந்த தனக்கு, தவெக-வின் உள்வட்டத்தைச் சேர்ந்த நிர்மல் மற்றும் சதீஷ் ஆகிய இருவரிடமிருந்து அச்சுறுத்தல்கள் வரத் தொடங்கியதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
தவெக தலைவர் விஜய்யின் 52-வது பிறந்தநாள் ஆலோசனைக் கூட்டத்தை 200 நிர்வாகிகளுடன் நடத்தி முடித்த அன்று நள்ளிரவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவித்தார். நள்ளிரவு 10:45 மணியளவில் முழு போதையில் கார் மற்றும் கத்திகளுடன் வந்த தவெக கும்பல், பவானியின் வீட்டிற்குள் புகுந்து அவரது கணவரின் மொபைல் எண்களைக் கேட்டு மிரட்டியுள்ளது.
அவர் வீட்டில் இல்லாததை அறிந்த அந்தக் கும்பல், “எங்களுக்கு எதிராகச் செயல்பட்டால் கத்தியால் குத்திக் கொலை செய்யாமல் விடமாட்டோம்” என்று கூறிவிட்டு தப்பியோடியுள்ளது. இந்த நள்ளிரவு கொலை மிரட்டல் தொடர்பான அத்தனை சிசிடிவி (CCTV) மற்றும் வீடியோ ஆதாரங்களையும் காவல் துறை ஆய்வாளரிடம் சமர்ப்பித்துத் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி அவர்கள் புகார் அளித்துள்ளனர். தவெக ஆட்சிக்கு வந்த சில வாரங்களிலேயே திருச்சியில் மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்குச் சொந்தக் கட்சியினரே கொலை மிரட்டல் விடுப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.