Posted in

மீண்டும் கட்டாய ராணுவப் பயிற்சி? வெளிநாடுகளுக்குப் பணத்தை மாற்றி உறவினர்களை வெளியேற்றும் ரஷ்ய அதிகாரிகள்!

உக்ரைன் உடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவில் மீண்டும் கட்டாய ராணுவத் திரட்டல் (Mobilisation) அறிவிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக, உயர்மட்ட அரசு அதிகாரிகளும், ராணுவ சேர்க்கை மைய ஊழியர்களும் தங்களது சொத்துக்களை வெளிநாடுகளுக்கு மாற்றி வருவதாகத் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்த பிறகு இரண்டாம் கட்ட ராணுவத் திரட்டல் உத்தரவை அதிபர் விளாடிமிர் புதின் பிறப்பிக்கக்கூடும் என்ற வதந்திகள் அதிகரித்துள்ளதே இதற்குக் காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.

ப்ளூம்பெர்க் (Bloomberg) ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய புலனாய்வு அறிக்கையின்படி, கடந்த சில மாதங்களாகப் பல மூத்த ரஷ்ய அதிகாரிகள் வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகளைத் தொடங்கி தங்களது கோடிக்கணக்கிலான பணத்தை ரகசியமாகப் பரிமாற்றம் செய்து வருகின்றனர். மேலும், ராணுவ சேர்க்கை அலுவலகங்களில் (Draft Offices) பணிபுரியும் ஊழியர்களே தங்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை உடனடியாக ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு எச்சரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய அதிகாரிகளின் இந்த ரகசிய நகர்வுகளுக்கு இணையாக, நாட்டின் முக்கியச் செல்வந்தர்களும் (Oligarchs) தங்களது சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படுவதைத் தவிர்க்கக் கிரிப்டோகரன்சி, தங்கம் மற்றும் வளைகுடா நாடுகளின் ரியல் எஸ்டேட் துறைகளில் முதலீடு செய்து பணத்தை வெளியேற்றி வருகின்றனர். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யா மேலும் 3,000,000 வீரர்களைத் திரட்டத் திட்டமிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள நிலையில், ஜார்ஜியா மற்றும் ஆர்மீனியா போன்ற நாடுகளுக்கு ரஷ்ய மக்கள் பெருமளவில் தப்பிச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

இருப்பினும், வெளிவரும் இந்தத் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் வதந்தி என்றும், நாட்டின் மீது நடத்தப்படும் “தகவல் தாக்குதல்” என்றும் கிரெம்ளின் மாளிகை மறுத்துள்ளது. புதிய ராணுவத் திரட்டலுக்கான எந்தவொரு அவசியமும் தற்போதைக்கு இல்லை என அதிபர் புதின் பகிரங்கமாகத் தெரிவித்துள்ள போதிலும், டிஜிட்டல் முறையில் ராணுவ அழைப்பாணைகளை அனுப்பும் புதிய அமைப்பை அரசு அமைத்திருப்பதால் ரஷ்ய உயர் அதிகார வர்க்கத்தினரிடையே பீதியும் பதற்றமும் தணியவில்லை.