தென்சீனக் கடலின் சர்ச்சைக்ககுரிய பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பிலிப்பைன்ஸ் அரசு மீன்வளத் துறையின் ‘BRP தாது மகத் சலாமத்’ (BRP Datu Magat Salamat) என்ற படகின் மீது சீனக் கடலோரக் காவல் படையின் கப்பல் திடீரென மோதி கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் மீனவர்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யச் சென்ற இந்த மனிதநேயப் படகை சீனக் கப்பல் அச்சுறுத்தும் வகையில் துரத்தி வந்து மோதிய வீடியோ காட்சிகள் வெளியாகிய சூழலில், “மோதுகிறது ஜாக்கிரதை” (Brace for impact) எனக் கப்பல் ஊழியர்கள் அச்சத்துடன் அலறும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸின் பாலவான் (Palawan) மாகாணக் கரைக்கு மிக அருகில், சுமார் 54 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள ‘சபினா ஷோல்’ (Sabina Shoal) பகுதிக்கு அருகே இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிலிப்பைன்ஸ் படகின் மிக அருகில் வந்து ஆபத்தான முறையில் நின்ற சீனக் கப்பல், அடுத்த சில நிமிடங்களில் வேகமாக வந்து வலதுபுறமாக மோதியது. இத்தாக்குதலில் பிலிப்பைன்ஸ் படகின் இரும்புத் தடுப்புகள், மேல்தளக் கட்டமைப்பு மற்றும் கம்பிகள் வளைந்து பலத்த சேதமடைந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக மாலுமிகள் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனப் பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது.
இருப்பினும், இச்சம்பவத்திற்குக் காரணம் பிலிப்பைன்ஸ் நாடுதான் என சீனா தனது பொறுப்பை முற்றிலுமாகத் துறந்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் மற்றும் சீனக் கடலோரக் காவல் படை வெளியிட்ட அறிக்கையில், “எங்களது கடலோரக் காவல்படை வழக்கமான சட்ட அமலாக்க நடவடிக்கையிலேயே ஈடுபட்டது. பிலிப்பைன்ஸ் படகு எங்களின் அடுத்தடுத்த எச்சரிக்கைகளைப் புறக்கணித்து, திடீரெனத் தனது பாதையை மாற்றி எங்களது கப்பலுக்கு குறுக்கே அதிவேகமாக வந்ததாலேயே இந்த விபத்து நேரிட்டது” எனத் தெரிவித்து குற்றச்சாட்டுகளைத் திருப்பியுள்ளது.
தென்சீனக் கடலின் ஒட்டுமொத்தப் பகுதிக்கும் சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், அப்பகுதியில் பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா உள்ளிட்ட பிற நாடுகளின் கப்பல்களுடன் சீனக் கடலோரக் காவல் படை மோதலில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. பிலிப்பைன்ஸின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) நுழைந்து சீனா நடத்தியுள்ள இந்தத் தாக்குதல், சர்வதேசக் கடல்சார் சட்டங்களை முற்றிலும் மீறும் செயல் எனக் கண்டித்துள்ள பிலிப்பைன்ஸ் அரசு, இச்சம்பவம் குறித்துத் தூதரக ரீதியாகக் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.