இந்தியாவில் செயல்பட்டு வரும் மாநில அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை வசூல் நிதி முந்தைய ஆண்டை விட ஒரே ஆண்டில் மூன்று மடங்கு வரை கணிசமாக உயர்ந்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் (Association for Democratic Reforms – ADR) தனது புதிய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நன்கொடைப் பட்டியலில் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுக ரூ.365.78 கோடி நிதி திரட்டி நாட்டின் அனைத்து மாநிலக் கட்சிகளிடையேயும் முதலிடம் பிடித்துள்ளது.
அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கும் பிரமாணப் பத்திரங்கள் மற்றும் நிதித் தணிக்கை அறிக்கைகளின் அடிப்படையில் ஏடிஆர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் மாநிலக் கட்சிகள் மொத்தம் ரூ.347.69 கோடியை மட்டுமே நன்கொடையாகப் பெற்றிருந்த நிலையில், 2024-25 நிதியாண்டில் அது ரூ.1,051.56 கோடியாக மூன்று மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்தப் பட்டியலில் ரூ.365.78 கோடி நன்கொடை பெற்று திமுக முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், இதில் அடையாளம் தெரியாத நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தொகையே ரூ.300.64 கோடியாக உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. திமுகவைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் ஆளுங்கட்சியான திரிணமுல் காங்கிரஸ் கட்சி ரூ.184.96 கோடி நன்கொடையுடன் இரண்டாவது இடத்திலும், ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ரூ.140.04 கோடியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் ரூ.100.19 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்த ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி இம்முறை பின்னடைவைச் சந்தித்துள்ளது. திரிணமுல் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் பெரும்பாலும் பெரு நிறுவனங்கள் (Corporate Sector) மற்றும் வணிக நிறுவனங்களின் நன்கொடைகளையே நம்பியிருந்ததாக ஏடிஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் செலவுகள் மற்றும் அரசியல் செயல்பாடுகள் அதிகரித்து வரும் சூழலில், மாநிலக் கட்சிகளின் நிதி திரட்டும் திறன் பன்மடங்கு உயர்ந்திருப்பது தேசிய அரசியலில் உற்றுநோக்கப்படுகிறது.
Keywords: மாநில கட்சிகள் நன்கொடை வசூல், திமுக முதலிடம் ஏடிஆர் அறிக்கை, ADR Political Party Donation Report 2026, DMK Tops Regional Party Donation List, ADR Report State Parties 1000 Crore, Election Commission Donation Details, Tamil Nadu Political News, India News Today