திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசுப் பள்ளி மாணவிகள் மூவர், ஆசிரியர்கள் கண்டித்ததால் மனவேதனையடைந்து வீட்டின் இருந்த இரத்த அழுத்த (BP) மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செங்கம் அருகே உள்ள அரசுக் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 9-ஆம் வகுப்பு மாணவிகள் சிலர், வகுப்பறையில் பாடம் நடத்தும்போது கவனம் செலுத்தாமலும் குறும்புத் தனங்களிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வகுப்பாசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், மாணவிகளைக் கண்டித்ததுடன் அவர்களின் பெற்றோரைச் அழைத்து வருவதாகக் கூறியதாகத் தெரிகிறது.
ஆசிரியர்களின் கண்டிப்பால் அச்சமும் மனவேதனையும் அடைந்த 3 மாணவிகள், பள்ளி முடிந்ததும் வீட்டிற்குச் சென்று அங்குப் பெற்றோர் வைத்திருந்த பிபி மாத்திரைகளை அதிகளவில் எடுத்து உட்கொண்டுள்ளனர். சிறிது நேரத்தில் மாணவிகளுக்கு மயக்கமும் வாந்தியும் ஏற்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவர்களை மீட்டுச் செங்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர்கள் மாற்றப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகக் கல்வித் துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் மன அழுத்தம் மற்றும் இதுபோன்ற தீவிர முடிவுகளைத் தவிர்க்க முறையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் எனக் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.