லண்டன்: இங்கிலாந்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தை நகரமான தெட்ஃபோர்டில் (Thetford), அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் தங்கியுள்ள கட்டிடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட போராட்டங்கள் அடுத்தடுத்து இரண்டு இரவுகள் வன்முறையாக மாறிய சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நார்போக் (Norfolk) பிராந்தியத்தில் உள்ள இந்தக் கிராமப்புற சந்தை நகரத்தில், அரசு சார்பில் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள மூன்று குடியிருப்பு வளாகங்களை நோக்கியும், உள்ளூர் காவல் நிலையத்தை நோக்கியும் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். தொடக்கத்தில் அமைதியான முறையில் தொடங்கிய இந்தப் போராட்டம், இரவில் திடீரெனக் கலவரமாக மாறியது. அகதிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், கட்டிடங்களை நோக்கிப் பொருட்களை வீசிச் சேதப்படுத்த முயன்றனர்.
வன்முறையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் காவல் அதிகாரி ஒருவர் கல்வீச்சில் காயமடைந்ததோடு, மற்றொரு பெண் அதிகாரி கடிக்கப்பட்டுப் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாகப் பொது ஒழுங்கைக் குலைத்தல் மற்றும் ஆயுதங்களை வைத் திருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இருவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் அரசுச் செலவில் அகதிகளை விடுதிகள் மற்றும் குடியிருப்புகளில் தங்க வைப்பதற்கு எதிராகக் கடந்த சில மாதங்களாகவே தீவிர வலதுசாரி அமைப்புகள் மற்றும் உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதியான நகரத்திலும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நார்போக் காவல் துறை எச்சரித்துள்ளது.