Posted in

சுவிஸ் ரயில் நிலையத்தில் கத்திக்குத்து: ‘அல்லாஹு அக்பர்’ என கத்திய நபர்

சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகருக்கு அருகிலுள்ள வின்டர்தூர் (Winterthur) ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை காலை 8:30 மணியளவில் பயங்கர கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. வண்டிகளைப் பிடிக்கவும், அலுவலகங்களுக்குச் செல்லவும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், 31 வயதான நபர் ஒருவர் திடீரென கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களைத் தாக்கத் தொடங்கினார். இந்த கொடூர சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலின் போது அந்த நபர் “அல்லாஹு அக்பர்” (இறைவன் மிகப் பெரியவன்) என்று பலமுறை உரத்த குரலில் கத்தியபடி ஓடியதாக சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில் பள்ளி சுற்றுலா சென்றுகொண்டிருந்த சிறு குழந்தைகள் குழு ஒன்று அவ்வழியாகக் கடந்து சென்றுள்ளது. கத்தியுடன் ஆக்ரோஷமாக ஓடிவந்த நபரைக் கண்டு குழந்தைகள் அலறியடித்து ஓடினர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட பள்ளி ஆசிரியர், குழந்தைகளை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று பெரும் அசம்பாவிதத்தைத் தடுத்தார்.

தகவலறிந்து ஐந்து நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு விரைந்த ஜூரிச் பிராந்திய போலீசார், தாக்குதல் நடத்திய நபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் சுவிட்சர்லாந்து மற்றும் துருக்கி ஆகிய இரு நாட்டு குடியுரிமைகளைப் பெற்றவர் என்றும், தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் (ISIS) உடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பே போலீசாரின் கண்காணிப்பில் இருந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. அண்மையில் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தாக்குதலுக்கு முந்தைய நாள்தான் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த கொடூரமான தாக்குதலை “ஒரு கொடிய பயங்கரவாதச் செயல்” (Act of Terror) என்று ஜூரிச் பிராந்திய பாதுகாப்பு இயக்குநர் மரியோ ஃபெஹ்ர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய நபர் தனி ஒருவனாகவே இந்தச் செயலைத் திட்டமிட்டு செய்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த 28, 43 மற்றும் 52 வயதுடைய சுவிஸ் குடிமக்கள் மூவரில், இருவர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில், ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் சுவிஸ் மக்களிடையே பெரும் பாதுகாப்பற்ற சூழலையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.