தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க) தலைவருமான சி. ஜோசப் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் இடையிலான விவாகரத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை, இரு தரப்பினரும் ஆஜராகாத காரணத்தால் வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அடுத்தகட்ட விசாரணையின் போது தம்பதியினர் இருவரும் வீடியோ கான்பரன்ஸ் (காணொளி காட்சி) மூலம் ஆஜராகவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இவர்களது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த விவகாரம் அரசியல் மற்றும் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சங்கீதா தாக்கல் செய்துள்ள 12 பக்க விவாகரத்து மனுவில், திருமணத்தை மீறிய உறவு, குடும்பத்தை அலட்சியப்படுத்துதல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாக்குதல் போன்ற பல்வேறு அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை விஜய் மீது முன்வைத்துள்ளார். மேலும் நீலாங்கரையில் உள்ள தங்களது இல்லத்தில் தொடர்ந்து வசிப்பதற்கான குடியிருப்பு உரிமை மற்றும் நிரந்தர ஜீவனாம்சம் (Alimony) வழங்க வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் கோரியுள்ளார். இதற்கு முன்பாக நடைபெற்ற விசாரணைகளின் போது இந்த வழக்கு தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான இந்த விவாகரத்து வழக்கு முதன்முறையாக நீதிமன்றத்திற்கு வந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், குடும்ப உறுப்பினர்களின் தலையீட்டால் இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதனால் தான் இந்த வழக்கு ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும் ஆகஸ்ட் 7 அன்று நடைபெறும் விசாரணையில் தான் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது தெளிவாகத் தெரியும்.