தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விலையும் (MRP) வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்தப்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணமாக ரூ.10 விதிக்கப்பட்டுள்ளதால் இந்த விலை உயர்வு அமலுக்கு வருவதாகத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து டாஸ்மாக் மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்களுக்குத் டாஸ்மாக் நிர்வாகம் முக்கியச் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
இந்த விலை உயர்வு இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள், பீர், ஒயின் மற்றும் பிற மாநில மதுபானங்கள் உட்பட அனைத்து அளவிலான பாட்டில்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஃப்.எல்.2, எஃப்.எல்.3 உரிமம் பெற்ற மதுக்கூடங்களுக்கு விநியோகிக்கப்படும் மதுபானங்களின் விலையும் இத்துடன் சேர்த்து மாற்றியமைக்கப்படுகிறது. உற்பத்தியாளர்கள் அனைவரும் திருத்தப்பட்ட ரூ.10 கூடுதல் கட்டணத்துடன் கூடிய புதிய விலைப்பட்டியலை பாட்டில்களில் கட்டாயமாக அச்சிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேவேளையில், நவம்பர் 1 முதல் கடைகளில் நியமிக்கப்பட்ட புதிய அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கக் கூடாது என டாஸ்மாக் ஊழியர்களுக்குக் கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்திற்காகக் கூடுதல் தொகையைக் வாடிக்கையாளர்களிடம் தனிப்பட்ட முறையில் வசூலிக்கக் கூடாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த விதியை மீறி கூடுதல் தொகை வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் நுகர்வோருக்குத் தெளிவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு டாஸ்மாக் கடையின் முன்பும் புதிய விலைப்பட்டியல் மற்றும் விதிகள் குறித்த அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படவுள்ளன.
வரவிருக்கும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளிலும் இந்த புதிய நடைமுறையும் மாற்றியமைக்கப்பட்ட விலையும் முழுமையாக அமலுக்கு வரவுள்ளன.