அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாகாணத்தில் உள்ள கால்வெஸ்டன் பிளெஷர் பியர் (Galveston’s Pleasure Pier) பொழுதுபோக்கு பூங்காவில், ஆபத்தான ரோலர்கோஸ்டர் (Rollercoaster) சவாரி ஒன்றின் போது ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட 8 பயணிகள் சுமார் 100 அடி உயரத்தில் அந்தரத்திலேயே பல மணி நேரம் சிக்கித் தவித்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. ‘அயன் ஷார்க்’ (Iron Shark) என்று அழைக்கப்படும் இந்த அதிவேக ரோலர்கோஸ்டர் வண்டி, செங்குத்தான உயரத்தில் மேலே ஏறிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நடுவழியில் அப்படியே நின்றுவிட்டது.
ஹூஸ்டன் சுதந்திர பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ‘எனர்ஜைஸ்டு ஃபார் ஸ்டெம் அகாடமி’ (Energized for STEM Academy) நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் பள்ளி சுற்றுலாவுக்காக (Field Trip) இந்தப் பூங்காவிற்கு வந்திருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது. மாலை 5:30 மணியளவில் ரோலர்கோஸ்டர் திடீரென ஸ்தம்பித்ததால், அதில் இருந்த மாணவர்கள் அனைவரும் செங்குத்தான பாதையில், முகங்கள் வானத்தை நோக்கியவாறு மிகவும் ஆபத்தான நிலையில் அமர்ந்திருக்க வேண்டியதாயிற்று. சுட்டெரிக்கும் வெயிலில், அந்தரத்தில் தொங்கியபடி மாணவர்கள் பயத்தில் அலறியது அங்கிருந்த பெற்றோர்களையும் பொதுமக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்வெஸ்டன் தீயணைப்புத் துறையினர் (Galveston Fire Department), சுமார் 105 அடி உயரம் வரை நீளக்கூடிய ராட்சத ஏணி லாரிகளைப் (Ladder Truck) பயன்படுத்திப் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளைத் தொடங்கினர். இரவு 8:30 மணி கடந்து இருள் சூழ்ந்த நிலையிலும், தீயணைப்பு வீரர்கள் தங்களின் தலைக்கவச விளக்குகளைப் (Headlamps) பயன்படுத்தி மீட்புப் பணியைத் தொடர்ந்தனர். ஒவ்வொரு மாணவருக்கும் பிரத்யேக பாதுகாப்பு உடைகளைப் (Harness) பூட்டி, மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் ஏணியின் வழியே ஒருவர் பின் ஒருவராகக் கீழே இறக்கிப் பத்திரமாக மீட்டனர்.
சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த திக் திக் போராட்டத்தின் முடிவில், விபத்தில் சிக்கிய 8 பேரும் எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகத் தீயணைப்புப் படைத் தலைவர் மைக் வரேலா தெரிவித்துள்ளார். இருப்பினும், கடுமையான வெப்பம் மற்றும் பயம் காரணமாக மாணவர்கள் சிலர் நீர்ச்சத்து குறைபாட்டால் (Dehydration) பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்பியதை உறுதி செய்த பள்ளி நிர்வாகம், தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கைக்குத் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.