Posted in

திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேறியபோதும்… பேரவையில் நின்று 5 கோரிக்கைகள் வைத்த தமிமூன் அன்சாரி!

தமிழகச் சட்டப்பேரவையில் முதலமைச்சரின் உரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரி தொடர் அமளியில் ஈடுபட்ட திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் அவைக் காவலர்களால் கூண்டோடு வெளியேற்றப்பட்ட நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தமிமூன் அன்சாரி மட்டும் அவையிலிருந்து வெளியேறாமல் தொடர்ந்து பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து தொடர் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டதால், சபாநாயகரின் உத்தரவின் பேரில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், திமுக வரிசையில் அமர்ந்திருந்த கூட்டணிச் தோழர்களில் ஒருவரான தமீமுன் அன்சாரி மட்டும் அவையிலேயே தொடர்ந்து அமர்ந்து அவை நடவடிக்கைகளில் பங்கேற்றார்.

இதனைத் தொடர்ந்து அவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசிய எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியனுக்குக் கீழ் செயல்படும் அண்ணாமலை பல்கலைக்கழகப் பிரச்சனைகள் தொடர்பாக 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். பல்கலைக்கழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்; 2012 முதல் நிறுத்தப்பட்டுள்ள பணப்பயன்களை அளிக்க வேண்டும்; 7வது ஊதியக் குழுவின் பயன்கள் மற்றும் நிலுவையில் உள்ள பதவி உயர்வுகளை வழங்க வேண்டும்; தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்; மற்றும் தொலைதூரக் கல்வி சான்றிதழ்களை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு மற்றும் வெளியேற்றத்திற்கு உள்ளான நிலையில், தமீமுன் அன்சாரி அவையில் ஒற்றை ஆளாக இருந்து தொகுதி மற்றும் மக்கள் பிரச்சனைகளைப் பேசிய சம்பவம் சட்டப்பேரவையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதே வேளையில், கூட்டணி முடிவுக்கு மாறாக அவர் அவையில் தொடர்ந்து பங்கேற்றது திமுக கூட்டணியில் முரண்பாடுகள் எழுந்துள்ளதோ என்ற விவாதத்தையும் கிளப்பியுள்ளது.