தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினரான தவெகவைச் சேர்ந்த எம்.ஆர். பல்லவி தனது கன்னி உரையை ஆற்றியுள்ளார். அவையில் உரையாற்றிய அவர், சமூக வலைத்தளங்களில் செய்திகளை ஸ்வைப் செய்து கடந்து சென்ற இளம் தலைமுறையினரைச் அரசியல் ரீதியாகச் சிந்திக்கவும், சமூகப் பிரச்சினைகளுக்காகக் களத்தில் நிற்கவும் வைத்த பெருமை முதலமைச்சர் சி.ஜோசப் விஜயையே சாரும் எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டது பேரவையின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தனது உரையில் திரு.வி.க. நகர் தொகுதியின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு கோரிக்கைகளை முன்வைத்த எம்.எல்.ஏ பல்லவி, அடுத்த தலைமுறைக்கு எந்த மாதிரியான தொகுதியை விட்டுச் செல்லப் போகிறோம் என்ற கேள்வியே மிக முக்கியமானது எனச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, வடசென்னைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, இளம் வயதிலேயே குழந்தைகள் போதைப்பழக்கத்திற்கு ஆளாகும் அபாயம் அதிகரித்து வருவதாகப் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டி பேரவையின் கவனத்தை ஈர்த்தார்.
போதைப்பொருள் அச்சுறுத்தல் என்பது வெறும் காவல்துறை சார்ந்த விஷயம் மட்டுமல்ல என்றும்; அது கல்வி, சுகாதாரம், பெண் பாதுகாப்பு மற்றும் ஒரு முழு தலைமுறையின் எதிர்காலம் சார்ந்த சமூகப் பிரச்சினை என்றும் அவர் வலியுறுத்தினார். போதைக்கு அடிமையாகும் இளைஞனின் குடும்பமும் பொருளாதாரமும் நிலைகுலைந்து போவதைத் தடுக்க, தனது திரு.வி.க. நகர் தொகுதியில் ‘ஆன்டி-டிரக்ஸ் மிஷன்’ (Anti-Drugs Mission) என்ற சிறப்புத் தடுப்பு அமைப்பை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
மேலும், போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் மற்றும் தாய்மார்கள் அச்சமின்றி தெரிவிக்கும் வகையில், தகவல் தருபவர்களின் விவரங்களைப் பாதுகாக்கும் வலுவான அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இளம் சட்டமன்ற உறுப்பினரான பல்லவியின் இந்த தொலைநோக்குப் பார்வையும், போதைப்பொருளுக்கு எதிரான ஆக்கபூர்வமான கன்னி உரையும் சட்டப்பேரவையில் அனைத்துத் தரப்பு உறுப்பினர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.