சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பதற்ற சூழலைக் கருத்தில் கொண்டு, பிரிட்டன் நாட்டின் முப்படைப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பிரிட்டன் கடற்படைக்குச் சொந்தமான நான்கு அணு ஆயுதத் தடுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களில் (Nuclear deterrent submarines) மூன்று ஒரே நேரத்தில் கடலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரெஞ்சுப் படைகளுடன் இணைந்து அண்மையில் வான்வழித் தாக்குதல் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்ட சில நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அசாதாரண சூழலில் மூன்று நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒரே நேரத்தில் கடலில் இயக்கப்படுவது கடந்த ஏழு ஆண்டுகளில் இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. இதில் குறைந்தபட்சம் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் அணு ஆயுத ஏவுகணைகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், மற்றவை வழக்கமான கடல் சோதனைகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, நான்காவது நீர்மூழ்கிக் கப்பலான ‘எச்எம்எஸ் விக்டோரியஸ்’ (HMS Victorious) டெவோன்போர்ட் கடற்படைத் தளத்தில் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தீவிர மோதல்கள் மற்றும் திடீர் பதற்ற உயர்வு காரணமாகப் பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் பாதுகாப்பு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. நேட்டோ கூட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், சர்வதேச நாடுகளின் கவனத்தை இது ஈர்த்துள்ளது.
பிரிட்டனின் இந்த அதிரடி கடற்படை நகர்வு உலக நாடுகளிடையே முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
எதிர்வரும் காலங்களில் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த இது போன்ற கூடுதல் ரோந்துப் பணிகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.