Posted in

அண்ணாமலையார் கோயிலுக்குள் ரகசிய கேமரா  – சிக்கிய வாலிபர்கள்

நினைத்தாலே முக்தி தரும் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்குள், கேமரா வசதி கொண்ட ‘மெட்டா ஏஐ’  ரகசியக் கண்ணாடி அணிந்து நுழைந்த ஆந்திராவைச் சேர்ந்த இரு இளைஞர்களைக் காவல் துறையினர் பிடித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்ணாமலையார் கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வரவிருந்த சூழலில், நடைபெற்ற இச்சம்பவம் கோயில் வளாகத்திலும் பாதுகாப்பு வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பவுனேஷ் மற்றும் மகேஷ் ஆகிய இரு இளைஞர்கள் அண்ணாமலையார் கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். அப்போது அவர்கள் வழக்கமான கண் கண்ணாடி போலத் தோற்றமளிக்கும், புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யும் வசதி கொண்ட ‘ரே-பான் மெட்டா ஏஐ’ நவீனக் கண்ணாடியை அணிந்து கோயிலின் பிரதானப் பகுதிக்குள் நுழைந்துள்ளனர். கோயிலுக்குள் செல்போன் மற்றும் மின்னணு சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களின் நடத்தை கோயில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

உடனடியாக அந்த இளைஞர்களை வழிமறித்துச் சோதனையிட்டபோது, அவர்கள் அணிந்திருந்த கண்ணாடியில் ரகசியக் கேமரா பொருந்தி இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, கோயில் பாதுகாப்பாளர்கள் உடனடியாகத் திருவண்ணாமலை நகரக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், அந்த மெட்டா கண்ணாடியைப் பறிமுதல் செய்ததுடன், இரு இளைஞர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய அமைச்சரின் வருகையையொட்டி கோயில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், இந்தச் சம்பவம் கூடுதல் எச்சரிக்கையை உருவாக்கியுள்ளது. இவர்கள் ஏதேனும் துர்நோக்கத்துடன் கோயிலுக்குள் கேமராவுடன் நுழைந்தார்களா அல்லது அறியாமையால் சமூக வலைத்தளப் பதிவுகளுக்காக வீடியோ எடுத்தார்களா என்ற கோணத்தில் போலிசார் முதற்கட்ட விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். மேலும், கோயிலின் புனிதத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, பக்தர்கள் இதுபோன்ற நவீனத் தொழில்நுட்ப சாதனங்களை அனுமதி மறுக்கப்பட்ட பகுதிகளுக்குள் எடுத்து வர வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.