Posted in

திருநெல்வேலியில் கொடூரம்: மாடசாமி கோவில் முன்பு 55 வயது நபர் ஓட ஓட வெட்டிக் கொலை!

நெல்லை அருகே மேலக்கல்லூர் அக்கிரஹாரம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் (55) என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சுதமல்லி – சேரன்மகாதேவி சாலையில் உள்ள மாடசாமி கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த ஆயுதம் ஏந்திய மர்மக் கும்பல் ஒன்று, அவரை வளைத்துத் தாக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த சண்முகவேல், நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் கொடூரக் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சுதமல்லி போலீசார், குற்றவாளிகளைப் பிடிக்க 8 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையின்படி, நெட்டூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (21), சிவசங்கரன் (26), மாரிச்செல்வம் (21), இசக்கிமுத்து என்ற கொடிமுத்து (27) மற்றும் ஒரு சிறுவன் உட்பட 5 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கொலைக்குக் காரணம் அதே பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட முன்விரோதம் எனத் தெரியவந்துள்ளது. மேலும், ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போதும் இந்த இரு குழுக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வழக்கு நிலுவையில் இருந்துள்ளது. அந்தப் பகையின் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கொலையில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் உடனே கைது செய்ய வலியுறுத்தி, சண்முகவேலின் உறவினர்கள் திருநெல்வேலி – சேரன்மகாதேவி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க மேலக்கல்லூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.