Posted in

கஜானா காலி என பழிபோடும் தவெக அரசு;மத்திய அரசுக்கு வக்காலத்தா?

தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் நிதியமைச்சர் என். மரிய வில்சன் வெளியிட்ட நிதிநிலை வெள்ளை அறிக்கை, முந்தைய திமுக அரசின் மீதான அரசியல் விமர்சனமாக மட்டுமே சுருங்கிவிட்டதாகப் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாநிலத்தின் கடன் சுமையை வெறும் எண்களாக (Absolute Numbers) காட்டிப் பயமுறுத்துவதை விடுத்து, கூட்டாட்சி தத்துவத்தில் மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசின் தவறான வரிக்கொள்கைகளை இந்த வெள்ளை அறிக்கை ஏன் கேள்வி கேட்கவில்லை என்ற காரசாரமான விவாதங்கள் தற்போது எழுந்துள்ளன.

மாநிலத்தின் கடன் சுமை என்பது ஏற்கனவே உள்ள நிதிப் பொறுப்புச் சட்டத்தின் (FRBM Act) வரம்புகளுக்கு உட்பட்டு, மாநில உற்பத்தி மதிப்பில் (GSDP) சுமார் 25 சதவீதத்திற்குள்தான் உள்ளது என்று சுட்டிக்காட்டும் வல்லுநர்கள், ஒன்றிய அரசின் தன்னிச்சையான முடிவுகளே மாநிலங்களை நிதி நெருக்கடிக்கு உள்ளாக்குவதாகக் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி விகிதத்தை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக ஒன்றிய அரசு குறைத்ததால், ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஏற்பட்ட 1.45 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பில் மாநிலங்களுக்கான பங்கும் பறிபோயுள்ளது. எனவே, மாநில அரசு ஒன்றிய அரசுடன் போராடி நியாயமான வரிப்பகிர்வைப் பெற வேண்டுமே தவிர, சொந்த மாநில மக்களின் தேவைகளைக் குற்றஞ்சாட்டக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் முந்தைய கடனுக்கான வட்டி ஆகியவற்றைக் காட்டி, மக்கள் நலத்திட்டங்களை முடக்குவது போன்றதொரு தொனி வெள்ளை அறிக்கையில் உள்ளதாகத் தெரிகிறது. ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை ‘இலவசங்கள்’ (Freebies) என்ற ஒற்றைச் சொல்லால் அவமதிப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று களப்பணியாளர்கள் கொதிப்படைந்துள்ளனர். நாட்டில் உழைக்கும் மக்கள் செலுத்தும் மறைமுக வரிகள் மூலமே (Indirect Taxes) ஒட்டுமொத்த தேசிய வருவாயில் பெரும்பகுதி கிடைக்கிறது; அவ்வாறு வரியைச் செலுத்தும் மக்களுக்குக் கல்வி, மருத்துவம் மற்றும் அத்தியாவசிய உதவிகளை வழங்குவது அவர்களின் ‘உரிமை’யே தவிர, இலவசம் அல்ல என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

இந்த வெள்ளை அறிக்கையின் பின்னணியில் ஒரு தந்திரமான அரசியல் ஒளிந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். முந்தைய திமுக அரசின் நிதி நிர்வாகச் சீர்கேடு மற்றும் காலி கஜானாவைக் காரணம்காட்டி, தவெக அரசு தேர்தலின் போது மக்களுக்கு அளித்த முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தவிர்ப்பதற்கே தற்போதிலிருந்தே இத்தகைய தற்காப்பு ஆட்டத்தை (Defense Game) நிதியமைச்சர் விளையாடத் தொடங்கியுள்ளார் என்ற விமர்சனமும் வலுத்துள்ளது. நிர்வாகச் சீர்திருத்தங்கள், வரி ஏய்ப்புத் தடுப்பு மற்றும் இயற்கை வளங்கள் மூலமான வருவாய்ப் பெருக்கத்தை அரசு தாராளமாகச் செய்யட்டும்; ஆனால் மக்களின் வாழ்வாதார உரிமைகளை ‘இலவசம்’ என்று கொச்சைப்படுத்துவதை அரசு உடனே நிறுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.