தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே நிலவி வரும் காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இரு மாநில முதலமைச்சர்களும் பெங்களூருவில் நேரில் சந்தித்துப் பேச உள்ளதாகச் செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கான முதற்கட்ட அழைப்போ அல்லது கோரிக்கையோ கர்நாடக அரசிடமிருந்து செல்லவில்லை என்றும், “தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தரப்பில் இருந்துதான் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்து கோரிக்கை வந்தது” என்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது இது குறித்துப் பேசிய முதலமைச்சர் டி.கே. சிவகுமார், “தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொலைபேசி வாயிலாக என்னிடம் தொடர்புகொண்டு காவிரி விவகாரம் குறித்துப் பேசினார். மேலும், அம்மாநிலத் தலைமைச் செயலாளரும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ கடிதம் எழுதியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீதிமன்ற விவகாரங்களைத் தாண்டி, இரு மாநிலங்களுக்கு இடையே சுமூகமான உறவைப் பேணவும், பிரச்சனைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் தமிழ்நாடு அரசு விருப்பம் தெரிவித்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழ்நாட்டிற்குத் தினமும் 3,500 கனஅடி நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் (CWRC) உத்தரவை எதிர்த்துக் கர்நாடகா மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ள சூழலில், இந்தப் பேச்சுவார்த்தை குறித்த தகவல்கள் வெளியாகின. “நாங்கள் அண்டை மாநிலத்தினரை மரியாதையுடன் நடத்தக் கடமைப்பட்டுள்ளோம். கர்நாடகாவில் உள்ள அணைகள் மற்றும் நீர்நிலைகளின் தற்போதைய நீர் இருப்பை நேரில் வந்து பார்வையிடுமாறு தமிழ்நாடு முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்” என்றும் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுடன் எந்தவித இருதரப்புப் பேச்சுவார்த்தையையும் நடத்தக் கூடாது என்றும், அது உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டிற்கு இருக்கும் வலுவான சட்டப் பூர்வமான உரிமைகளைப் பலவீனப்படுத்திவிடும் என்றும் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் பாமக கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன. தமிழ்நாடு அரசின் தரப்பில் இருந்துதான் பேச்சுவார்த்தைக்கு முதலில் அழைப்பு விடுக்கப்பட்டது என்ற டி.கே. சிவகுமாரின் கருத்து, தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.