Posted in

ஈரானின் அணுஆயுதத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த திட்டம்! – ‘பிக்ஏக்ஸ்’ மலைப் பாதைகளைத் தகர்க்க டிரம்ப் பரிசீலனை!

ஈரானின் நிலத்தடி அணுஆயுதத் திட்டங்கள் மீண்டும் புத்துயிர் பெறுவதைத் தடுப்பதற்காக, அந்நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கும் ‘பிக்ஏக்ஸ்’ (Pickaxe Mountain) மலைப்பகுதி சுரங்கப் பாதைகளின் நுழைவாயில்களைத் தாக்கித் தகர்ப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகப் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஈரானின் நடான்ஸ் (Natanz) அணு உலையை அடுத்துள்ள இமயமலை போன்ற கடினமான பாறைப்பகுதியில் அமைந்துள்ள இந்த மையத்தை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் விரைவில் அதிரடித் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானிய மொழியில் ‘கூ-எ கோலங் காஸ் லா’ (Kuh-e Kolang Gaz La) என அழைக்கப்படும் இந்த பிக்ஏக்ஸ் மலை மையம், பூமிக்கு அடியில் சுமார் 100 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் கிரானைட் பாறைகளுக்கு நடுவே கட்டப்பட்டுள்ளது. இங்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உருவாக்கப் பயன்படும் பல்லாயிரக்கணக்கான சென்ட்ரிஃபியூஜ் (Centrifuge) இயந்திரங்களை ஈரான் மறைத்து வைத்திருப்பதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகள் சந்தேகிக்கின்றன. மிகக் கடினமான பாறைத் தளங்களுக்கு அடியில் அமைந்துள்ளதால், வழக்கமான பங்கர் பாஸ்டர் (Bunker Buster) குண்டுகளால் கூட இந்த மையத்தை முழுமையாக அழிக்க முடியாது என ராணுவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில், இந்த நிலத்தடி மையத்தை முழுமையாக அழிக்க முடியாவிட்டாலும், அங்கு அமைந்துள்ள சுரங்கப் பாதைகளின் நுழைவாயில்கள் (Tunnel Entrances) மற்றும் காற்றோட்ட அமைப்புகளைச் சக்திவாய்ந்த ஏவுகணைகள் மூலம் தகர்ப்பதன் மூலம், அந்த மையத்தின் செயல்பாடுகளை முடக்கி வைக்க முடியும் எனப் பாதுகாப்பு வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதன்மூலம் சென்ட்ரிஃபியூஜ் இயந்திரங்களை வெளியே கொண்டு வரவோ அல்லது அணுஆயுதப் பணிகளைத் தொடரவோ முடியாதவாறு ஈரானைக் முடக்க முடியும் என வாஷிங்டன் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே தொடர் தாக்குதல்கள் மற்றும் வான்வழி மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், “ஈரான் அணுஆயுதத் திட்டத்தில் முன்னேற்றம் அடைவதைச் சகித்துக் கொள்ள முடியாது என்றும், பிக்ஏக்ஸ் மலைப் பகுதியை மிக விரைவில் கடுமையாகத் தாக்குவோம்” என்றும் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். நிலத்தடி அணுஆயுத மையங்களை இலக்கு வைத்து அமெரிக்கா மேற்கொள்ளவிருக்கும் இந்த அடுத்தகட்டப் போர்த் திட்டம், மத்திய கிழக்கில் போர்ப் பதற்றத்தை மேலும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.