Posted in

ஹார்முஸ் திறக்க ஈரானின் நிபந்தனை; பதிலுக்கு இழப்பீடு கேட்கும் டிரம்ப்!

உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில், ஈரான் விதித்த நிபந்தனைகளுக்குப் பதிலடியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான புதிய நிபந்தனையை விதித்துள்ளார். அமெரிக்க முற்றுகையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும், போர்ச் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஈரான் கோரி வந்த நிலையில், “கடந்த 50 ஆண்டுகளில் ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் ஈரான்தான் அமெரிக்காவிற்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் அமெரிக்க-ஈரான் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஈரான் கோரிக்கை விடுத்திருந்தது. இதற்குத் தனது ‘டிரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில் பதிலளித்துள்ள அதிபர் டிரம்ப், “கடந்த அரை நூற்றாண்டில் ஈரான் ஆதரவுப் படைகள் நடத்திய குண்டுவெடிப்புகள், பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் குடும்பங்களுக்கும், ஈரானில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களின் குடும்பங்களுக்கும் ஈரான் அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் ஈரானுடன் நடைபெறும் அனைத்து விதமான தூதரக மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகளிலும் இந்த இழப்பீட்டுக் கோரிக்கை முதன்மை நிபந்தனையாக சேர்க்கப்படும் என்றும் அமெரிக்க அரசுத் தரப்பில் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த திடீர் மற்றும் கடுமையான நிலைப்பாடு காரணமாக, ஓமன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

அதிபர் டிரம்ப்பின் இந்த அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை பேரல் ஒன்றுக்கு $89 டாலரை நெருங்கியுள்ளது. அமெரிக்காவின் கோரிக்கையை ஈரான் முற்றிலுமாக நிராகரித்துள்ள சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து முடங்கிக் கிடப்பதால் உலக நாடுகளின் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.