Posted in

உக்ரைனுக்கு டிரம்ப் பச்சைக்கொடி! இனி சொந்த நாட்டிலேயே Patriot ஏவுகணை தயாரிப்பு

ரஷ்யாவின் தொடர் பேலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து உக்ரைனைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், அமெரிக்காவின் அதிநவீன ‘பேட்ரியாட்’ (Patriot) ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளையும் அவற்றின் இன்டர்செப்டர் ஏவுகணைகளையும் உக்ரைனிலேயே நேரடியாகத் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப உரிமத்தை (License) வழங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பைச் சந்தித்துப் பேசிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ரஷ்யாவிற்கு எதிரான போர் ஐந்தாவது ஆண்டை நெருங்கியுள்ள நிலையில், உக்ரைன் தொடர்ந்து அமெரிக்காவிடம் வான் பாதுகாப்பு எந்திரங்களைக் கோரி வந்தது. இந்நிலையில் டிரம்ப் அளித்துள்ள இந்த அனுமதியைக் சுட்டிக்காட்டிய ஜெலென்ஸ்கி, “அமெரிக்கா இனி தங்களுக்கு ஏவுகணைகளை வழங்கவில்லையெனக் குற்றம் சாட்டுவதைத் தவிர்க்க, ‘நீங்களே சொந்தமாகத் தயாரித்துக் கொள்ளுங்கள்’ எனக் கூறி டிரம்ப் எங்களுக்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளார்” எனத் தெரிவித்தார். இதன் மூலம் உக்ரைன் இராணுவ வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

அதிபர் டிரம்பின் சந்திப்பைத் தொடர்ந்து, பேட்ரியாட் ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் அமெரிக்காவின் முன்னணி பாதுகாப்புத்துறை நிறுவனங்களான லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin) மற்றும் ரேதியான் (Raytheon) ஆகிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளைச் சந்தித்து உக்ரைன் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைனின் உள்கட்டமைப்புகளையும் தொழில்நுட்ப வல்லமையையும் பயன்படுத்தி, மிக விரைவாக இந்த ஏவுகணைகளின் கூட்டு உற்பத்தியை (Co-production) தொடங்குவதற்கான ஒப்பந்த நடைமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் நிலவி வரும் ஏவுகணைப் பற்றாக்குறைக்கு மத்தியில், உக்ரைன் தனது சொந்த மண்ணிலேயே பேட்ரியாட் ஏவுகணைகளைத் தயாரிப்பது உக்ரைனுக்கு மட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கும் நீண்ட கால அடிப்படையில் பெரும் பலனைத் தரும் என ராணுவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளையில், உடனடியாகத் தேவைப்படும் ஏவுகணைகளுக்கு ஐரோப்பிய நாடுகளின் நிதி உதவியுடன் கொள்முதல் செய்யவும், நீண்ட கால பாதுகாப்பிற்குச் சொந்தத் தயாரிப்பில் ஈடுபடவும் உக்ரைன் திட்டமிட்டுள்ளது.