தென்மாவட்டங்களில் ஒன்றில் களமிறங்கி வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பெண் எம்.எல்.ஏ ஒருவரின் கணவர், அதிகாரிகளிடமும் தொழில் அதிபர்களிடமும் மாதாந்திர “வசூல் வேட்டையில்” ஈடுபட்டு வருவதாக வெளியாகியுள்ள பரபரப்புத் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. “மேடத்தைக் கவனிக்க வேண்டும்” என்ற பெயரில் உள்ளூர் அளவிலான பல்வேறு திட்டங்களுக்கு லஞ்சம் மற்றும் மாமூல் கேட்டு அச்சுறுத்தி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
தொகுதி சார்ந்த அரசு திட்டங்கள், கட்டட அனுமதி மற்றும் உள்ளாட்சிப் பணிகளுக்கு அனுமதி வழங்கும் துறை அதிகாரிகளை நேரில் மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட தொகையைத் தவறாமல் வழங்கிட வேண்டும் என்று அவர் அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. தங்களது கோரிக்கைகளுக்கு உடன்படாத அதிகாரிகளை மாற்றியமைத்து விடுவதாக மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் அடுக்கப்படுகின்றன.
எம்.எல்.ஏ-வின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அவரது கணவர் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கை குறித்து பாதிக்கப்பட்ட உள்ளூர் ஒப்பந்ததாரர்களும் அதிகாரிகளும் கடும் அதிருப்தியில் உள்ளனர். மக்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெற கட்சித் தலைமை பாடுபட்டு வரும் சூழலில், மக்கள் பிரதிநிதியின் குடும்பத்தினரே இத்தகைய செயல்களில் ஈடுபடுவது கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பாக கட்சித் தலைமைக்கு ஆடியோ மற்றும் எழுத்துப்பூர்வமான ஆதாரங்களுடன் புகார்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தென்மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வசூல் வேட்டை குற்றச்சாட்டுகள் தொடர்பாகக் கட்சியின் மேல்மட்டம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.