Posted in

சீமானை கைது செய்ய தவெக நடவடிக்கையா ? முதல் கட்டம் ஆரம்பமாகியுள்ளது !

தமிழக அரசியல் களம் தற்பொழுது தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையேயான மோதலால் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் மற்றும் மாநில மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆகியோரை மேடைகளில் ஒருமையில் பேசி, தரக்குறைவாக விமர்சித்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிரடியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவெக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர் அதிசயா தலைமையில் திரண்ட தவெகவினர் இந்த பரபரப்பு புகாரை அளித்து, சீமான் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாகப் பேசும்போது மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ‘நோ கமெண்ட்ஸ்’ என்று கூறியதாகக் குறிப்பிட்டு, அவரை சீமான் மிகக் கேவலமாக நையாண்டி செய்ததாக புகார் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகள் அரசியலில் இருக்கும் சீமான், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதலமைச்சரையும், அமைச்சரையும் பொதுவெளியில் நாகரீகமே இல்லாமல் ஒருமையில் பேசியிருப்பது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக வழக்கறிஞர் அதிசயா ஊடகங்களிடம் கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக முதல்வர் விஜய் இதுவரை 69 திரைப்படங்களில் நடித்துள்ள போதிலும், அதில் ஒரு படம் கூட உருப்படியான படம் இல்லை என்றும், அவரின் சிகரெட் பிடிக்கும் ஸ்டைலை பார்த்து தனலட்சுமி என்ற பெண் விரும்பியதாகக் கூறி பொதுக்கூட்டத்தில் மக்களைச் சிரிக்க வைப்பதற்காக சீமான் மட்டமான முறையில் கேலி செய்துள்ளார். “சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை சீமான் புரிந்து கொள்ள வேண்டும்; அவரும் திரையுலகில் இருந்தவர்தான். விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு, சீமானை நேரில் சென்று மரியாதை நிமித்தமாகப் பார்த்துவிட்டு வந்தார். அந்த குறைந்தபட்ச அரசியல் நாகரீகம் கூட இல்லாமல் முதல்வர் விஜய்யை சீமான் வம்புக்கு இழுப்பது அநாகரீகமானது” என்று தவெக தரப்பு மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.

முதல்வர் விஜய் பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள் தமிழகத்தில் 717 மதுக்கடைகள் அதிரடியாக மூடப்பட்டுள்ளது, பொதுமக்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது, மற்றும் விவசாயிகளுக்கு 50,000 ரூபாய் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது போன்ற மாபெரும் சாதனைகளைச் செய்துள்ளார். இதுமட்டுமின்றி, பெண்களின் பாதுகாப்பிற்காக ‘சிங்கப்பெண் அதிரடி படை’ உருவாக்கம், பருத்தி இறக்குமதியில் 11 சதவீத வரி தள்ளுபடி, ஆபத்தான ஆழமான கல்குவாரிகளுக்குத் தடை மற்றும் ரேஷன், கோவில்களில் நடக்கும் ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி என அதிரடி காட்டி வரும் மக்கள் முதல்வரைப் பற்றி அவதூறு பரப்புவதை அனுமதிக்க முடியாது என தவெகவினர் எச்சரித்துள்ளனர். இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட சென்னை காவல் ஆணையர், இதற்கான சிஓபி (COP) ரசீதை வழங்கி, உடனடியாகத் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.