Posted in

பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு… ஈரானின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம்!

ஈரானில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அரசுக்கு எதிரான பிரம்மாண்ட போராட்டங்களில் பங்கேற்ற இரு இளைஞர்களுக்கு, இஸ்ஃபஹான் மாகாணத்தில் உள்ள பொது சதுக்கம் ஒன்றில் வைத்து ஈவிரக்கமின்றி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிய நீதித்துறையின் அதிகாரப்பூர்வச் செய்தி நிறுவனமான ‘மீசான்’ (Mizan) வெளியிட்டுள்ள தகவலின்படி, அபுல்ஃபசல் செபாஹி மற்றும் அமீர்ஹொசைன் சஃபாரி ஆகிய இருவருக்கே செவ்வாய்க்கிழமை அதிகாலை பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 8-ஆம் தேதி இஸ்ஃபஹானின் அாலிகானி சதுக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது, பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களின் உயிரிழப்பிற்கு வழிகோலியதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட 12 இளைஞர்களுக்கு ஈரானிய புரட்சிகர நீதிமன்றம் ஒரே விசாரணையில் மரண தண்டனை விதித்த நிலையில், ஏற்கனவே இருவர் கடந்த வாரம் தூக்கிலிடப்பட்டனர். அதைத் தொடர்ந்து தற்போது மேலும் இருவருக்குப் பலத்த பாதுகாப்புடன் இரும்பு மேடை அமைக்கப்பட்டுப் பொதுவெளியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சிறப்பு நிபுணர்கள் குழு ஈரானிய அரசுக்கு அவசரக் கோரிக்கை விடுத்திருந்தது. மூடிய அறைக்குள் முறையான சட்டத்தரணிகள் இன்றி நடத்தப்பட்ட விசாரணை, தொலைக்காட்சிகளில் கட்டாயப்படுத்திப் பெறப்பட்ட வாக்குமூலங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தத் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஐநா நிபுணர்கள் சாடினர். இருப்பினும், சர்வதேச அமைப்புகளின் கோரிக்கைகளையும் மீறி ஈரான் அரசு இந்தத் தூக்குத் தண்டனையை அதிரடியாக நிறைவேற்றியுள்ளது.

ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசுக்கு எதிரான எதிர்ப்புக் குரல்களை ஒடுக்கும் வகையில், போராட்டக்காரர்கள் மீது இத்தகைய கடுமையான மரண தண்டனைகள் அதிவேகமாக நிறைவேற்றப்பட்டு வருவதாக மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. அதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேலும் பல இளைஞர்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள நிலையில், ஈரான் அரசின் இந்த மனித உரிமை மீறலுக்கு எதிராக உலகளவில் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.