Posted in

100 மீட்டர் ஆழத்தில் இருக்கும் ரகசிய அணுமையம்… தாக்குதல் குறித்து டிரம்ப் வெளியிட்ட புதிய எச்சரிக்கை!

ஈரானின் அணுசக்தித் திட்டங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக நடைபெற்று வரும் தூதரகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், அந்நாட்டின் மிகவும் பாதுகாக்கப்பட்ட ‘பிக்அக்ஸ் மவுண்டன்’ (Pickaxe Mountain) நிலத்தடி அணுசக்தி மையத்தின் மீது மிகக் கடுமையான ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிரடியாக எச்சரித்துள்ளார். அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளை இன்னும் முடிக்கவில்லை என்றும், மிக விரைவில் அந்தப் பகுதி இலக்கு வைக்கப்படும் என்றும் அவர் வெள்ளை மாளிகையில் வைத்து அறிவித்துள்ளார்.

மத்திய ஈரானின் நடான்ஸ் (Natanz) பகுதிக்கு அருகே சுமார் 100 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் மலைகளைக் குடைந்து இந்த பிக்அக்ஸ் மவுண்டன் மையம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் நடைபெற்ற அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கும் வகையில், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் மற்றும் அதிநவீன சென்ட்ரிஃபியூஜ்களைப் பாதுகாப்பதற்காக இந்த நிலத்தடி அரண் அமைக்கப்பட்டதாக மேற்கத்திய உளவு அமைப்புகள் கருதுகின்றன.

“ஈரான் எக்காரணம் கொண்டும் அணுஆயுத வல்லரசாக மாறுவதை அனுமதிக்க முடியாது” எனக் கூறியுள்ள டிரம்ப், பேச்சுவார்த்தை மேஜையில் ஈரான் உடன்பட மறுத்தால், அமெரிக்காவின் சக்திவாய்ந்த குண்டுகள் அந்த நிலத்தடிச் சுரங்கப் பாதைகளைத் தகர்க்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இந்த மையம் மிக ஆழமான பாறைகளுக்குக் கீழே அமைந்துள்ளதால், வழக்கமான பம்பர்-பாஸ்டர் (Bunker-buster) குண்டுகளால் கூட இதை உடனடியாக அழிப்பது கடினம் என சர்வதேச ராணுவ வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளையில், அமெரிக்காவின் இந்த அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரானிய வெளியுறவுத்துறை, பிக்அக்ஸ் மவுண்டனில் எந்தவிதமான சட்டவிரோத அணுசக்தி நடவடிக்கைகளும் நடைபெறவில்லை என்றும், அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகள் தாக்குதலுக்கான போலிக் காரணமே என்றும் சாடியுள்ளது. இரு நாடுகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் தளர்வடைந்து வரும் நிலையில், டிரம்பின் இந்தத் தொடர் தாக்குதல் எச்சரிக்கைகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் மேகங்களைச் சூழ வைத்துள்ளன.