Posted in

எனக்குனே வருவீங்களா? – அடுத்தடுத்து சிக்கிய 2 அமைச்சர்கள்- கடும் அதிருப்தியில் முதலமைச்சர் விஜய்

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று சில வாரங்களே ஆன நிலையில், கேபினட் அமைச்சர்கள் தொடர்பான இரண்டு அடுத்தடுத்த சர்ச்சைகள் மாநில அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய்க்கு இந்த விவகாரங்கள் கடுமையான நிர்வாக ரீதியிலான அழுத்தத்தையும், டென்ஷனையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ‘கில்லி’ சரத்குமார் தொடர்பான பழைய வைரல் வீடியோ விவகாரம் ஒருபுறம் எரிந்து கொண்டிருக்க, மற்றொரு அமைச்சர் விஜய் பாலாஜியின் சர்ச்சைக்குரிய மேடைப் பேச்சு எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது, அமைச்சர் சரத்குமார் தனது குடும்பத்தினருடன் அமர்ந்திருந்த போது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி வெள்ளை நிறப் பொருள் ஒன்றை நசுக்குவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளாக உருவெடுத்தன. இதற்கு மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்ட அமைச்சர், தனது மகளுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் பாராசிட்டமால் மாத்திரையை அவசரமாக ஏடிஎம் கார்டு கொண்டு பொடியாக்கியதாக விளக்கம் அளித்தார். இந்த விவகாரத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அமைச்சரை நேரில் அழைத்து தங்களின் அதிருப்தியைத் தெரிவித்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சரத் விவகாரம் ஓய்வதற்குள், ஈரோடு மாவட்டம் பவானியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி, “அரசியல்வாதிகள் ஊழல் செய்ததை பார்த்திருக்கிறோம், ஆனால் 2026 தேர்தலில் மக்களே மிகப்பெரிய ஊழல் செய்தீர்கள். வாங்க வேண்டிய இடத்தில் வாங்கிக்கொண்டு, குத்த வேண்டிய இடத்தில் சரியாகக் குத்தி நமது ஆட்சியை கொண்டு வந்தீர்கள்” என்று பேசி புதிய வெடியைப் பற்ற வைத்துள்ளார். வாக்காளர்கள் மற்ற கட்சிகளிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு தவெகவுக்கு வாக்களித்ததாக அமைச்சர் பொதுமேடையில் ஒப்புக்கொண்டாரா என்று எதிர்க்கட்சியான திமுகவும், அரசியல் விமர்சகர்களும் தற்பொழுது தவெக அரசை நோக்கிக் கேள்விக் கணைகளைத் தொடுத்து வருகின்றனர்.

குறுகிய காலத்திலேயே அமைச்சர்கள் இருவர் இத்தகைய சர்ச்சைகளில் சிக்கியுள்ளது முதலமைச்சர் விஜயை மிகக் கடுமையான அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. தற்போதைய சூழலில் இவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்தால், அதனை எதிர்க்கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் செய்யக் கூடும் என்பதால், இரு அமைச்சர்களையும் சில வாரங்களுக்குப் பொது நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாம் எனத் தவெக தலைமை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் சில வாரங்களில் வரவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தின் போது இவர்களின் பதவிகள் பறிக்கப்படலாம் என்றும் கோட்டை வட்டாரத் தகவல்கள் கசிகின்றன.