Posted in

சட்டப்பேரவையில் ‘மன்மத நன்றி’ எனக் கூறியது குறித்துத் தவெக எம்.எல்.ஏ கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தனது கன்னிப் பேச்சை ஆற்றினார். அப்போது தனது பேச்சின் இறுதியில், சபாநாயகருக்கு நன்றி தெரிவிக்கும் போது “மனமார்ந்த நன்றி” எனக் கூறுவதற்குப் பதிலாக வாய் தவறி “மன்மத நன்றி” எனக் குறிப்பிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிப் பெரும் விவாதத்தையும் ட்ரோல்களையும் உருவாக்கிய நிலையில், அதுகுறித்துப் பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழில் சாதாரணமாக வணக்கம் அல்லது நன்றி தெரிவித்தால் கூட தற்காலத்தில் இணையத்தில் ட்ரோல் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது என கனிமொழி குறிப்பிட்டுள்ளார். இதனால் ஏற்கனவே ட்ரோலில் வந்த வார்த்தைகளையே பயன்படுத்திப் பேச்சைத் தொடங்கலாம் என்ற எண்ணத்தில் “மன்மத வணக்கம்” மற்றும் “மன்மத நன்றி” எனக் நகைச்சுவையாகக் குறிப்பிட்டதாகக் கூறியுள்ளார். மேலும், இந்த விவாதம் மூலமாகக் கவுண்டம்பாளையம் தொகுதி மற்றும் தனது பெயர் தமிழகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், தவெக எம்.எல்.ஏ கனிமொழியின் இந்த விளக்கத்திற்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. மக்கள் பிரதிநிதியாகச் சட்டமன்றத்தில் பேசும் போது பொறுப்புடனும் கவனத்துடனும் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பான விவாதங்களும் சமூக வலைதளப் பதிவுகளும் அரசியல் களத்தில் தொடர்ந்து கவனத்தைப் பெற்று வருகின்றன.