ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டில் இருந்து அந்தலூசியா மற்றும் செவில் பகுதியை நோக்கிச் சென்ற இரண்டு அதிவேக பயணிகள் ரயில்கள் டோலிடோ மாகாணத்தில் உள்ள உர்தா (Urda) ரயில் நிலையத்திற்கு அருகே புதன்கிழமை காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த பயங்கர விபத்தில் ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்ததில், இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாகக் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு ரயில்களிலும் சேர்த்து 500-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்த நிலையில், படுகாயமடைந்த பலருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து நிகழ்ந்த இடத்திற்கு உடனடியாக விரைந்த மீட்புக் குழுவினர், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவவும் தற்காலிக சிகிச்சை மையங்களை அமைக்கவும் அருகில் உள்ள உர்தா நகரப் பகுதி தயார்படுத்தப்பட்டுள்ளதாக அந்நகர மேயர் மானுவல் கலாஃப் தெரிவித்துள்ளார். இந்த துயரச் சம்பவத்தையடுத்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தனது அன்றாட நிகழ்வுகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு நிலவரத்தைக் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார்.
இந்த கொடூர விபத்தைத் தொடர்ந்து மாட்ரிட் மற்றும் அந்தலூசியா பிராந்தியங்களுக்கு இடையேயான அனைத்து அதிவேக ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விபத்துக்கான சரியான காரணம் குறித்து தேசிய ரயில்வே உள்கட்டமைப்பு நிறுவனமான ‘அடிஃப்’ (Adif) மற்றும் சிவில் பாதுகாப்பு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
ரயில் பெட்டிகளின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அரசு நிர்வாகம், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தியுள்ளது.