Posted in

நொடிப்பொழுதில் நரகமாக மாறிய பயணம்: பிரிட்டனில் ரயில்கள் மோதி பெரும் விபத்து!

பிரிட்டன் நாட்டின் பெட்ஃபோர்ட் (Bedford) நகருக்கு அருகே இரு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதாமல், ஒரே பாதையில் பின்னால் இருந்து அதிவேகமாக ஒன்றின் மீது ஒன்று மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த கோர விபத்தில் ஒரு ரயிலின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ரயிலில் பயணம் செய்த பயணிகளில் சுமார் 90 பேர் படுகாயமடைந்துள்ளதால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளிக்கிறது. இந்த அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து பிரிட்டன் போக்குவரத்து காவல்துறை அங்கு அவசரநிலையை (Major Incident) பிரகடனப்படுத்தி மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

இங்கிலாந்தின் கிழக்கு மிட்லாண்ட்ஸ் ரயில்வே (EMR) நிறுவனத்திற்குச் சொந்தமான இரு பயணிகள் ரயில்கள் லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. நாட்டிங்ஹாமில் இருந்து லண்டன் செயின்ட் பான்கிராஸ் நோக்கிச் சென்ற ரயில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பெட்ஃபோர்ட் தெற்கு சந்திப்பு அருகே தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்தது. அப்போது அதே பாதையில் பின்னால் வந்த கார்பி (Corby) டவுன் ரயில், எதிர்பாராதவிதமாக முன்னால் நின்றுகொண்டிருந்த ரயிலின் பின்புறத்தில் மிகக் கொடூரமாக மோதியது. மோதிய வேகத்தில் ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தூக்கி வீசப்பட்டன.

விபத்து நேரிட்ட தருணத்தில் ரயிலுக்குள் இருந்த பயணிகள் அனைவரும் இருக்கைகளிலிருந்து தூக்கி எறியப்பட்டு, ஒருவரோடு ஒருவர் மோதி ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். “எந்தவொரு முன்னெச்சரிக்கை அலாரமும் ஒலிக்கவில்லை; ஒரு பயங்கர வெடிச்சத்தம் மட்டுமே கேட்டது, அடுத்த நொடி நான் முன்னால் இருந்த இருக்கையில் தூக்கி வீசப்பட்டேன்; எங்கு பார்த்தாலும் புகைமூட்டமும் மக்களின் மரண ஓலமும் மட்டுமே கேட்டது” என்று உயிர் தப்பிய பயணி ஒருவர் தனது நரக வேதனையைப் பகிர்ந்துள்ளார். விபத்தில் சிக்கிய 11 பேருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையும், 22 பேருக்கு எலும்பு முறிவு போன்ற கடுமையான காயங்களும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், 6 அதிநவீன ஏர்-ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்கள் மற்றும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக பெட்ஃபோர்ட் மற்றும் சுற்றியுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து காரணமாக லண்டன் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கான முக்கிய ரயில் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்துக்கான பின்னணி மற்றும் சிக்னல் குறைபாடுகள் குறித்து பிரிட்டன் ரயில் விபத்து விசாரணை பிரிவு (RAIB) தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.