Posted in

கருங்கடலில் அதிரடி: ரஷ்ய போர் விமானங்களை வேட்டையாடி வீழ்த்த உக்ரைன் தயாரித்த புதிய கடல் ட்ரோன்!

கருங்கடலில் ரஷ்யாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், உக்ரைன் பாதுகாப்பு நிறுவனம் ஒரு அதிநவீன கடல் ட்ரோனை (Maritime Drone) உருவாக்கியுள்ளது. பாரிஸில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘யுரோசடோரி’ (Eurosatory) சர்வதேச பாதுகாப்பு கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிரைமரன் (Trimaran) வடிவ ட்ரோனுக்கு ‘சைரனா’ (SIRENA) என்று பெயரிடப்பட்டுள்ளது. கடற்பரப்பில் பயணித்தபடி, வான்வெளியில் பறக்கும் ரஷ்ய போர் விமானங்களைக் கண்டறிந்து துல்லியமாகச் சுட்டு வீழ்த்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அதிநவீன கடல் ட்ரோன், எதிரி விமானங்களின் தகவல் தொடர்புகள் மற்றும் செயற்கைக்கோள் வழித்தட (GNSS) சிக்னல்களை ஒட்டுமொத்தமாக முடக்கும் மல்டி-பேண்ட் ஜாமிங் (Multi-band Jamming) தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. சுமார் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்கு எதிரிகளின் மின்னணு சாதனங்களைச் செயலிழக்கச் செய்யும் திறன் கொண்ட இந்த அமைப்போடு, பெலிகன் வி1 (Pelican V1) ரேடார் மற்றும் ஸ்கார்பியன் வி5 (Scorpion V5) மின்னணு போர் முறைகளும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இது ரஷ்யாவின் காமிகேஸ் (Kamikaze) ரக ட்ரோன்களின் ஆட்டோபைலட் அமைப்பைக் குலைத்து, அவற்றை வழிதவறச் செய்யும் வல்லமை பெற்றது.

வெறும் ஜாமிங் கருவிகளோடு நிறுத்தாமல், வான்வழித் தாக்குதலுக்கான ‘சீடிராகன்’ (SeaDRAGON) ஏவுகணை ஏவுதளமும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்க தயாரிப்பான ‘AIM-9M சைடுவைண்டர்’ (Sidewinder) வான்-டு-வான் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யப் போர் விமானங்களை உக்ரைன் படைகளால் சுட்டு வீழ்த்த முடியும். மணிக்கு 90 கிமீ வேகத்தில் பாயும் இந்த சைரனா ட்ரோன், சுமார் 300 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் அல்லது ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடியது.

முழுக்க முழுக்கத் தானியங்கி (Autonomous), பகுதித் தானியங்கி மற்றும் ரிமோட் கண்ட்ரோல் ஆகிய மூன்று நிலைகளிலும் இயங்கும் இந்த ட்ரோன், தொடர்ந்து 24 மணி நேரம் வரை கடலில் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் பணிகளில் ஈடுபடக்கூடியது. கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து 800 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்குகளைத் தாக்கக்கூடிய இந்தத் தொழில்நுட்பம், கருங்கடலில் ரஷ்ய விமானப்படைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறும் என ராணுவ வல்லுநர்கள் கணித்துள்ளனர்.